அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டம்; சிஎம்டிஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அடையாறு ஆற்றின் வெள்ள நீர் கொள்ளும் திறன் குறித்து வல்லுனர் குழுவைக் கொண்டு ஆய்வு நடத்தி பின்னர் வீடு கட்டும் திட்டம் குறித்து முடிவையும் அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் ஓர் அங்கமாக குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண் 170-ஐக் கொண்ட 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான கூட்டம் இந்த வாரத்தில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரில் வெள்ளத்தை ஏற்படுத்தும் சக்தியாக அடையாறு மாறியுள்ள நிலையில், இந்த விஷயத்தில் அதீத ஆர்வம் காட்டப்படுவது கவலையளிக்கிறது.

அடையாறு ஆற்றின் அங்கமாக நந்தம்பாக்கத்தில் தொடங்கி அனகாபுத்தூர் வரை நீண்டிருக்கும் அந்த நிலம் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானது. அந்த நிலத்தை ஆற்றுப்பகுதியாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) வகைப்படுத்தியுள்ளது. அக்குழுமம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் சர்வே எண் 170 அடையாறு ஆற்றின் நடுவே அமைந்திருக்கிறது. இந்த நிலத்தை ஆற்றுப் பகுதி என்ற நிலையிலிருந்து குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதியாக மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் போதிலும் அது ஏற்கப்படவில்லை. இது குறித்த தனியார் நிறுவனத்தின் கோரிக்கைகள் கடந்த 17 ஆண்டுகளாக சி.எம்.டி.ஏ.வால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இப்போது சம்பந்தப்பட்ட நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதியாக மாற்றி வகைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யும்படி சிஎம்டிஏ-வுக்கு வீட்டு வசதித்துறை செயலாளர் ஆணை பிறப்பித்திருக்கிறார். சிஎம்டிஏ ஏற்கனவே தயாரித்த வரைபடம் தவறானதாக இருக்கலாம் என்றும், அதனடிப்படையில் அதை மாற்றி வகைப்படுத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைவிட ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று வருவாய்த்துறையும், அந்த நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி அமைக்க ஆட்சேபனையில்லை என்று பொதுப்பணித்துறையும் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சான்றிதழ்களை வழங்கியிருப்பது தான்.

ஆவணங்களின் அடிப்படையில் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட நிலம் ஆற்றுப்பகுதியாகவே குறிப்பிடப் பட்டு வருவதை அறிய முடிகிறது. 1912-ம் ஆண்டு ஆவணங்களின்படி சர்வே எண் 170 என்பது மொத்தம் 56.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட 5 பகுதிகளாக இருந்தது. அதன்பின் அந்த நிலம் 42 உட் பிரிவுகளாக பிரிக்கப்பட்டாலும் கூட, இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள 6 ஏக்கர் நிலம் பிரிக்கப்படாமலேயே இருந்து வந்திருக்கிறது.

1940ம் ஆண்டு வரை இந்த நிலத்தில் 35 செண்டுகளுக்கு மட்டும் தான் ரயத்துவாரி சட்டத்தின் கீழ் விவசாயம் செய்வதற்காக பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2000வது ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் படிப்படியாக நிலங்களை வாங்கி வருகிறது.

2019ம் ஆண்டு வரை கட்டுமான நிறுவனம் மொத்தம் 4 ஏக்கர் நிலங்களை வாங்கியிருக்கிறது. 2020ம் ஆண்டு வரை அந்த நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, சர்ச்சைக்குரிய நிலம் அடையாற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் இருப்பதை சி.எம்.டி.ஏ வெளியிட்ட வரைபடம் மூலம் அறிய முடிகிறது. சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த மழையில் போது அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மூழ்கியதையும், அதனால் சென்னை மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் மறந்து விட முடியாது.

அதற்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மிக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது ஒரு காரணம் என்றால், அந்த நீர் தடையின்றி ஓட முடியாத அளவுக்கு அடையாற்றில் பெருமளவிலான ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது இன்னொரு காரணம். 2015ம் ஆண்டுக்குப் பிறகு பலமுறை செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி அடையாற்றில் வெள்ள நீரை திறந்து விடும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளால் இத்தகைய நிகழ்வுகள் இன்னும் அதிகரிக்கக் கூடும். அதனால், அடையாற்றில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் பெருகும்.

இத்தகைய சூழலில் அடையாற்றின் நீரோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படும் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளையோ, தொழிற்சாலைகளையோ கட்ட அனுமதித்தால் எதிர்காலத்தில் சென்னைக்கு மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடும்; அதை சென்னை தாங்காது. அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பவை வருவாய்த்துறை சான்றுகள் தான். ஆனால், அவையே 2016ம் ஆண்டில் திருத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அவை குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதற்கு முன்பாக, இந்த விஷயத்தில் சி.எம்.டி.ஏ எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அடையாறு ஆற்றின் வெள்ள நீர் கொள்ளும் திறன் குறித்து வல்லுனர் குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதனடிப்படையில் மட்டுமே இந்த விஷயத்தில் எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்க வேண்டும்." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்