சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதால், வரும் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நடந்த முக்கிய ‘சம்பவங்கள்’:
> அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கோயம்பேட்டை அடுத்துள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
> பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தனது பிரச்சார வாகனத்தில் காலை 8 மணிக்கு புறப்பட்டார்.
> பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டார்.
» கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு
> எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கிரீன்வேஸ் சாலையில் இருந்து பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை வழிநெடுகிலும் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
> அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்திற்கு காலையிலிருந்தே ஏராளமான தொண்டர்கள் திரண்டதால், கோயம்பேடு முதல் வானகரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
> பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் பெருமளவில் வருகை தந்திருந்ததால், அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
> கடுமையான போக்குவரத்து நெரிசலை கடந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாகவே பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்தார்.
> முன்கூட்டியே பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மண்டபத்தில் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் அவரை வரவேற்கவில்லை.
> ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் வந்திருந்தனர்.
> காலை 8 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்பட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்னர் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். இதனால் காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு தொடங்கியது.
> அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற மேடையில், கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது.
> மேடையில் கட்சியின் தலைமைக் கழக உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
> முதல் வரிசையில் ஒருபுறம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், மறுபுறம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அமர, இருவருக்கும் நடுவில், தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேன் அமர்ந்திருந்தார்.
> பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதிலிருந்தே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அமைதியான முறையில் மிகவும் இறுக்கத்தோடு அமர்ந்திருந்தார். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார்.
> பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
> அதிமுக மூத்த நிர்வாகி வைகைச் செல்வன் பொதுக்குழு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
> பொதுக்குழுக் கூட்டத்திற்கு தலைமைதாங்க தற்காலிக அவைத் தலைவரை செயற்குழு, பொதுக்குழு சார்பில், ஓபிஎஸ் முன்மொழிய, அதை இபிஎஸ் வழிமொழிந்தார்.
> செயற்குழு, பொதுக்குழுவில் கொண்டுவரப்படுகிற 23 தீர்மானங்கள் பொதுக்குழு பார்வைக்கு வைக்கப்படுவதாக வைகைச் செல்வன் அறிவித்தாதர். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது மேடையில் இருந்த மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது, நிராகரிக்கிறது" என்று ஆவேசமாக கத்தி கூறினார்.
> பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை கட்சியின் முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்று பேசினார். அவர் எம்ஜிஆரின் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே பாடலை பாடி, தலைவன் இருக்கிறான், வெகு விரைவில் வருவான் என்று கூறியபோது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆர்ப்பரித்தனர்.
> பின்னர், மேடைக்கு வந்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர். ஒற்றைத் தலைமை கோரிக்கையை இணைத்து அடுத்து எப்போது பொதுக்குழு கூட்டப்படுகிறதோ, அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
> இரங்கல் தீர்மானத்தை அதிமுக மூத்த தலைவர் செம்மலை வாசித்தார். அதிமுகவைச் சேர்ந்த 115 பேர், தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா, இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ உயர் அதிகாரிகள், ஐக்கிய அரபு நாட்டு அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அலி நஹ்யான், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் புனீத் ராஜ்குமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
> இரங்கல் தீர்மானத்தைத் தொடர்ந்து, இறந்தவர்களுக்கு அனைவரும் எழுந்த நின்று அஞ்சலி செலுத்துமாறு தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
> அவைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது மேடையில் பேச வந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர பன்னீர் ரோஜா மாலை அணிவிப்பதற்காக கொண்டுவரப்பட்டது. "இருங்கப்பா" என்று சலித்துக்கொண்ட இபிஎஸ், மாலை போட வந்தவர்களை கடிந்துகொண்டார்.
> பின்னர் அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக இபிஎஸ் அறிவித்தார். இந்த தீர்மானத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய, ஜெயக்குமார் வழிமொழிந்தனர்.
> அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேனுக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சால்வை அணிவித்து, மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
> பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமை உரை ஆற்றிய தமிழ்மகன் உசேன், தன்னை அவைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். 1972-ல் எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கிய செய்தியறிந்தவுடன், தான் ஓட்டிக்கொண்டிருந்த அரசுப்பேருந்தை வழியிலேயே நிறுத்திவிட்டு வந்ததாக அவர் கூறினார்.
> பின்னர் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், "இப்பொதுக்குழுவில் இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின் கீழ், தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த பொதுக்குழுவிலே அடுத்த பொதுக்குழுவுக்கான் தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்" என்று பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் மனு ஒன்றை அவைத்தலைவரிடம் கொடுத்தார்.
> கோரிக்கை மனுவை அவைத்தலைவர் கையில் கொடுத்து, ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலியுறுத்தியும், அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் ஆக்ரோஷமாக கத்தி கோரிக்கை மனுவின் மீது அடித்து அடித்து பேசி கொடுத்துவிட்டுச் சென்றார். அப்போது அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆர்பரித்தனர்.
> இதன்பின்னர், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேசுவதற்கு முன்னர், மேடைக்கு வந்த கே.பி.முனுசாமி, " நிரந்தர அவைத்தலைவர்" என்பதை வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.
> இதைத்தொடர்ந்து 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வரும் ஜூலை 11-ம் தேதியன்று காலை 9.15 மணிக்கு இதேபோல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
> பொதுக்குழுக் கூட்டத்திற்கு கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றியுரை ஆற்றினார்.
> அப்போது பொதுக்குழுக் கூட்ட மேடையில் இருந்து எழுந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "சட்டத்திற்கு புறம்பாக, நடைபெறுகிற இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்று கூறிவிட்டு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உடன் அங்கிருந்து வெளியேறினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
> அப்போது மேடையில் அமர்ந்திருந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களை அமைதிகாக்கும்படியும், அமர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
> நன்றியுரையின் இறுதியில், எஸ்.பி.வேலுமணி, "இன்றைக்கு இங்கு ஏற்பட்டிருக்கக்கூடிய எழுச்சி, திமுக ஆட்சிக்கு சாவு மணி அடிக்கக்கூடிய எழுச்சி, இபிஎஸ் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடித்து, தமிழக முதல்வராக மீண்டும் வருவார்" என்று சிற்றுரை நிகழ்த்தினார்.
> மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி, எழுந்து நின்று அனைவருக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். அப்போது, இரண்டாவது முறையாக மீண்டும் பன்னீர் ரோஜா மாலையை அணிவிக்க வந்ததால், கடுப்பாகி, மாலை போட வந்தவரை திட்டிவிட்டு அமர்ந்துவிட்டார்.
> பின்னர் பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்திருந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்துகள், கிரீடம், வாள், செங்கோல் வழங்கப்பட்டது.
> வெளியூரிலிருந்து வந்தவர்கள் பத்திரமாக பாதுகாப்பு செல்லுமாறும், உணவருந்திவிட்டு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
> இதன்பிறகு பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைத்திலிங்கம், “பேராசை, பதவி வெறியில் கட்டுப்பாடு இல்லாத காட்டுமிராண்டித்தனமான பொதுக்குழு நடந்துள்ளது” என்று கடும் ஆவேசத்துடன் பேசினார். அதன் விவரம் > “பேராசை, பதவி வெறி, காட்டுமிராண்டித்தன பொதுக்குழு” - வைத்திலிங்கம் ஆவேசம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago