சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்படவிருந்த தீர்மானங்களை நிராகரிக்கப்பதாகவும், இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின் கீழ், தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்மொழியப்பட்டதால், கூட்டத்திலிருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதிலிருந்தே, ஒற்றைத் தலைமை கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கோஷங்களை அதிகம் எழுப்பி வந்தனர்.
தலைவன் வெகுவிரைவில் வருவான்: இந்த செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றார் வளர்மதி. அப்போது அவர், “காலையில் இருந்தே நீங்கள் எல்லாம் இங்கு வந்துள்ளீர்கள். எம்ஜிஆரின் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் தயங்காதே, அந்த தலைவன் இருக்கிறான். வருவான், வெளியே வருவான். வெகு விரைவிலே வருவான்" என்று அவர் கூறினார். அப்போது கூட்டம் ஆர்ப்பரித்தனர்.
» புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்தநாள் விழா: முதல்வர் வாழ்த்து
ஒற்றைத் தலைமை தீர்மானம் வேண்டும்: இதன்பின்னர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மேடையில் பேசியது: "பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்துவிட்டார்கள். அப்படி நிராகரித்துவிட்ட தீர்மானங்களுக்குப் பின்னர், அவர்கள் வைக்கின்ற ஒரேயொரு கோரிக்கை ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்பதுதான். அந்த ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து, அடுத்தக் கூட்டத்தை தலைமை எப்போது கூட்டுகிறதோ, அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்" என்று அவர் கூறினார். அப்போது அரங்கம் ஆர்ப்பரித்தது.
பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்: அவைத் தலைவர் தேர்வுக்குப் பின்னர் மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக கையொப்பமிட்டு கொடுக்கப்பட்ட இந்தக் கோரிக்கை மனுவை, கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார். அந்த மனு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எழுதப்பட்டிருந்தது.
அதில், "இன்று 23.6.2022, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வரும் இந்தப் பொதுக்குழுவில், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 2,190 பொதுக்குழு உறுப்பினர்களால், கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டுள்ள பொருளை விவாதிக்க கோரிக்கை வைக்கிறோம்.
கட்சி தற்போது உள்ள நிலை குறித்தும், குறிப்பாக இரட்டைத் தலைமையால், கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், சங்கடங்கள், நிர்வாக சிக்கல்கள் பற்றியும் ஆளும் திமுக அரசையும், கட்சியையும், பிரதான எதிர்கட்சி என்ற முறையில், இரட்டைத் தலைமையால் எதிர்த்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடையே மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.
இரட்டைத் தலைமையின் முரண்பாடான, தெளிவில்லாத, ஒருங்கிணைப்பில்லாத செயல்பாட்டால், தொண்டர்களிடையே மிகப் பெரிய சோர்வு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள இந்த நிலையில், 100 ஆண்டுகளானாலும், கட்சி நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசை ஈடேற வேண்டும் என்றால், எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போன்று வலிமையான, தைரியமான, தெளிவான ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
எனவே இந்தப் பொதுக்குழுவில் இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு, ஒற்றைத் தலைமையின் கீழ், தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்தப் பொதுக் குழுவிலே அடுத்த பொதுக்குழுவுக்கான் தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும்" என்று தொண்டர்கள் சார்பாகவும், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கை மனுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் சி.வி.சண்முகம் வழங்கினார்.
ஜூலை 11: 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வரும் 11.7.2022 அன்று காலை 9.15 மணிக்கு இதேபோல் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றியுரையாற்ற வந்தபோது, சட்டத்துக்குப் புறம்பாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை கண்டிப்பதாகவும், எதிர்ப்பதாகவும் கூறி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago