புதுச்சேரியில் நூறு நாள் பணியில் ஈடுபட்ட 30 பெண்களைக் கொட்டிய விஷக் குளவிகள்: 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 100 நாள் வேலை திட்டப் பணியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களை விஷக் குளவிகள் கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஏரிப்பாக்கம் நத்தமேட்டில் காளி கோயில் அருகே உள்ள குளத்தை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு இருந்தனர். ஏரி மற்றும் வாய்க்காலை சுற்றி இருந்த புதரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புதரில் இருந்த கூடு கலைந்து விஷக் குளவிகள் ஒரே நேரத்தில் அங்கு தூர்வாரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை கொட்டின. 30-க்கும் மேற்பட்டோரை குளவிகள் கொட்டியதில் 12 பேர் மயக்கம் அடைந்தனர்.

அவர்களுக்கு நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 20 பேர் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதிக அளவில் பாதிக்கப்பட்ட 4 பேர் அரசு பொது மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவிலும், 2 பேர் ஜிப்மர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு வெளிப்புற பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டிருந்தவர்களை குளவி கொட்டியதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்று வரும் அரசு பொது மருத்துவமனைக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பேரவை துணைத் தலைவருமான ராஜவேலு பார்த்து ஆறுதல் கூறியதுடன், அங்கிருந்த மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE