மேகதாது விவகாரத்தில் மீண்டும் ஒரு வெளிப்படையான விவாதம் வேண்டும்: தமிழிசை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக மீண்டும் வெளிப்படையான விவாதம் வேண்டும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அரசு கடிதம் அனுப்பியுள்ளது” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 75 இடங்களில் சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டது. பெரிய மார்க்கெட் பகுதியில் நடந்த தூய்மைப் பணியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை குப்பைகளை அள்ளி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியது: "அனைவரும் புதுச்சேரியை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள். இது அரசு மட்டுமே செய்யும் பணியல்ல. சாப்பிட்ட பின்பு குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவதை கடைபிடியுங்கள்.

இந்தியாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதால் அனைத்து தரப்பினரும் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.

ஸ்மார்ட் சிட்டியில் மார்க்கெட்டை புதிதாக கட்டவுள்ளோம். சாலையில் வியாபாரம் செய்வது தடுக்கப்படும். அக்னி பாதை திட்டம் என்பது முப்படைத் தளபதிகளின் ஆலோசனைக்குப் பிறகு மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டது. எனவே இதை யாரும் அரசியலாக்க வேண்டாம்.

காவிரி நீரில் புதுச்சேரிக்கு உண்டான ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். காவிரி வழிகாட்டு விதிமுறைப்படி மேகதாது அணை கட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தாலும் மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக மீண்டும் ஒரு வெளிப்படையான விவாதம் வேண்டும்" என்று தமிழிசை கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE