ஒற்றைத் தலைமை சர்ச்சை | மீண்டும் தர்மம் வெல்லும்; ஓபிஎஸ் ட்வீட்

By செய்திப்பிரிவு

சென்னை: "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இந்தத் தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் தர்மயுத்தம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதல்வராக்கப்பட்ட ஓபிஎஸ் திடீரென அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த அவர் அமைதியாக அமர்ந்து தியானம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்சியில் தனக்கு எதிராக சதி நடக்கிறது. முதல்வர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக விரட்டப்பட்டேன் என்றார். கட்சியை மீக்க தர்மயுத்தம் நடத்துவேன். தர்மம் வெல்லும் என்று கூறினார். அதன் பின்னர் அதிமுக இணைப்பு நடந்தது. இந்நிலையில் தற்போது ஒற்றைத் தலைமை சர்ச்சையைக் குறிப்பிட்டு ஓபிஎஸ் மீண்டும் தர்மயுத்தம் பற்றி பேசியுள்ளார்.

ஒற்றைத் தலைமை கோரிக்கை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து கடந்த 14-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் எழுந்த பேச்சு தொடர்பான சர்ச்சை, முடிவின்றி தொடர்கிறது. சென்னை வானகரம் வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் ஜூன் 23-ம் தேதி (நாளை) கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை முன்னிறுத்தி, அதற்கேற்ப சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றிவிட வேண்டும் என்று அவரது தரப்புமுனைப்பு காட்டி வருகிறது. அதே நேரம்,‘ஒற்றைத் தலைமை வேண்டாம். தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த அசாதாரண நிலையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டாம். கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும்’ என பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியதுடன், கூட்டத்தை தடுப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறார். அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் அவரது தரப்பினர் இறங்கியுள்ளனர்.

சட்ட முயற்சி: கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியிலான முயற்சியில் இறங்கியுள்ளது. அதிமுகவில் நிர்வாகரீதியான 75 மாவட்டங்களில் பெரும்பான்மை, அதாவது 66-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை இபிஎஸ்ஸுக்கு தெரிவித்துள்ளனர். தஞ்சை, தேனி, விருதுநகர், சென்னையில் ஒரு மாவட்டம், அரியலூர், பெரம்பலூர் என குறைந்த எண்ணிக்கையிலான மாவட்டச் செயலாளர்களே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்.

இந்தச் சூழலில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE