பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடமும், 10-ம் வகுப்புத் தேர்வில் 2-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தது எப்படி என்பது குறித்து கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டம் கடந்த10 ஆண்டுகளுக்கு முன் 10-ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது.
பின்னர், 2011-க்குப் பிறகு ஓரளவு முன்னேற்றமடைந்து, கடந்த முறை பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் 8-ம் இடம் பெற்றிருந்தது. இந்த முறை பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடமும், 10-ம் வகுப்புத் தேர்வில் 2-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனை குறித்து ஓய்வுபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயராமன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த தரேஷ் அகமது.
2011-ல் அவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றபோது பெரம்பலூர் மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் 29-வது இடத்தில் இருந்தது. இதனால், இம்மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த, கல்வியாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாணவர்களை நன்றாக படிப்பவர்கள், சுமாராக படிப்பவர்கள், படிப்பில் கவனம் செலுத்தாதவர்கள் என 3 பிரிவாக பிரித்து அதற்கேற்றார்போல சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களுக்கு அவர்களது இல்லம்தேடிச் சென்று கல்வி கற்றுக்கொடுக்க அந்தந்த ஊரில் உள்ளபடித்த இளைஞர்களை பயன்படுத்திக்கொண்டார்.
பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியை பெற்று இவர்களுக்கு தொகுப்பு ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார். இதன் பலனாக அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வுமுடிவில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் 14-வது இடத்துக்கு முன்னேறியது. அதற்கு அடுத்த ஆண்டுகளில் 4-வது மற்றும் 2-வது இடங்களுக்கு முன்னேறியது.
அவர் பணிமாறுதல் பெற்றுச் சென்ற பின்பும், ஆசிரியர்கள் அதே உற்சாகத்துடன் பணியாற்றியதால், தேர்வு முடிவுகளில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து மாநில அளவில் 10 இடங்களுக்குள் பெற்றுவந்தது. இப்போது பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியது: இப்போதைய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெ.அறிவழகனின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் இம்மாவட்டம் அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளது. பொதுத்தேர்வுக்கு முன்பு 3 மாதங்களாக தினமும் நடத்தப்பட்ட அலகு தேர்வுகள், மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ள மிகவும் தன்னம்பிக்கையை அளித்தது.
ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி கூடுதல் பயிற்சி அளிக்கஏற்பாடு செய்தார். அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை அவ்வப்போது நேரில் அழைத்து முழு தேர்ச்சி பெற உழைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதனால் ஆசிரியர்கள் மேலும் உற்சாகமடைந்து தீவிர கவனம் செலுத்தினர் என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்தது: கரோனாவுக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அவ்வப்போது வழங்கப்பட்ட அறிவுரைகளை ஆசிரியர்கள் முறையாக பின்பற்றி செயல்பட்டனர்.
மேலும், வாரந்தோறும் மாணவ, மாணவிகளுக்கு எழுத்துத் தேர்வு நடத்தி அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்து, முழு கவனம் செலுத்தினர். இதை பின்பற்றி மாணவ, மாணவிகள் நன்றாக படித்தனர். இவையே இந்த வெற்றிக்கு காரணம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago