சென்னை: சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உருவாகியுள்ளதால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்குமாறு இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதால், பொதுக்குழு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில், திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தி,அதில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தைநிறைவேற்ற பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்ததில் இருந்து கடந்த ஒரு வாரமாகவே அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. தொடர்ந்து, நேற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, காமராஜ், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை தள்ளிவைக்குமாறு இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்ஸுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அனுப்பியுள்ள கடிதத்தை வைத்திலிங்கம் நேற்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 14-ம் தேதி நடந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் சிலர் கட்சியின் சட்ட விதிகளை அறியாமல் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து கருத்து தெரிவித்தனர்.
அந்த கருத்தால் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்த அசாதாரண சூழ்நிலைகாரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினை உருவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, ‘வரும் 23-ம் தேதி நடக்கவுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளிவைக்கலாம். அடுத்த கூட்டத்துக்கான இடம், நாள், நேரத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கலந்துபேசி பின்னர் முடிவு செய்யலாம்’ என்று ஓபிஎஸ் மற்றும் நான் கையெழுத்திட்டு இபிஎஸ்ஸுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
இதற்கான பதில் கிடைத்த பிறகு, அதன் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெறுவது, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். ஒருங்கிணைப்பாளர்கள் இருவரின் கையெழுத்து இன்றி ஒற்றைத் தலைமைதொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டுவர முடியாது. சர்வாதிகாரமாக செயல்படவிரும்புவோர்தான் ஒற்றைத் தலைமைக்கான வேலைகளை செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், பொதுக்குழு கூட்டத்தை நடத்தியே ஆகவேண்டும் என்பதில் இபிஎஸ் தரப்பு முழுமூச்சில் இறங்கியுள்ளது.
பொதுக்குழு ஏற்பாடுகள் ஆய்வு
துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு நடக்கவுள்ள வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்துக்கு நேற்றுசென்று ஏற்பாடுகளை 2 மணி நேரம்பார்வையிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது:
பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்புகடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும். துணை ஒருங்கிணைப்பாளர் வாசித்த கடிதம் குறித்து எங்களுக்கு தெரியாது. கடிதம் வந்ததாக இபிஎஸ்ஸும் தெரிவிக்கவில்லை.
இருப்பினும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதலின்றி பொதுக்குழு நடைபெறாது. சமீபத்தில் தீர்மானம் வடிவமைப்பு குழு கூட்டத்தில் அவரும் பங்கேற்று தீர்மானங்களில் திருத்தம் செய்வது குறித்து தெரிவித்தார். ஆனால், இப்போது தெரியாததுபோல பேசுகிறார்.
ஒருசில சந்தர்ப்பவாதிகள் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள, இந்த இயக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு காலம்பதில் சொல்லும். பொதுக்குழு கூட்டத்துக்கு ஓபிஎஸ் கட்டாயம் வருவார். நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அனைவரும் ஏற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், இபிஎஸ்ஸுக்கு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மாவட்டச் செயலாளராக உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றுஇபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தனக்கு பெருகி வரும் ஆதரவை கருத்தில் கொண்டு, செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமைகுறித்த தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்ற இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கேற்ப சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் வகையில், தீர்மானத்தின் ஷரத்துகளை தயாரிக்கதீர்மானக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்த எந்த தடையும் இல்லை என்று பழனிசாமி ஆதரவாளரான வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள்அமைச்சர் ஜெயக்குமார், ‘‘ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டும் எண்ணம் இல்லை. ஒற்றைத் தலைமை என்பதே நிர்வாகிகளின் எண்ணம். இந்த விவகாரத்தில் விரைவில் சுமுக முடிவு எட்டப்படும்’’ என்றார்.
ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினர் நேற்றுமாலை முதல் மீண்டும் தனித்தனியாக தீவிர ஆலோசனை நடத்தினர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து வழக்கறிஞர்களுடனும் இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், பொதுக்குழு நடக்குமா என தொண்டர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago