சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: சிறுவாணி அணையில் இருந்து கோவையின் குடிநீர் விநியோகத்துக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகள், வழியோர கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

சிறுவாணி அணையில் 49.50 அடி (878.50 மீட்டர்) அளவுக்கு நீரைத் தேக்கலாம். ஆனால், அணையின் பாதுகாப்பு காரணமாக 45 அடி உயரம் வரைக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழைக்காலத்தில் சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் அவ்வப்போது குறிப்பிட்ட மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சிறுவாணி அணையில் இருந்து கடந்த சில வாரங்களாக வழக்கமான அளவை விட குறைந்த அளவே தண்ணீர் எடுக்க கேரள அரசு அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக விநியோகி்க்கப்படும் நீரின் அளவை அதிகரிக்கவும், நீர் தேக்க அளவை அதிகரிக்கவும் தமிழக முதல்வர் கேரள முதல்வருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார். இந்தச் சூழலில் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கோவைப்பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறுவாணி அணையில் இருந்து கடந்த 16-ம் தேதி 46.45 எம்.எல்.டி, 17-ம் தேதி 47.37 எம்.எல்.டி, 18-ம் தேதி 47.17 எம்.எல்.டி, 19-ம் தேதி 46.39 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய (ஜூன் 20-ம் தேதி) நிலவரப்படி அணையில் இருந்து 101.4 எம்.எல்.டி அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி அணையில் 15.02 அடி அளவுக்கு நீர் உள்ளது’’ என்றனர்.
--

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE