சென்னை - மாம்பலம் கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மாம்பலம் கால்வாயில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னையில் 48.80 கிலோ மீட்டர் நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட தியாகராய நகர், நந்தனம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளின் வழியே மாம்பலம் கால்வாயானது சுமார் 5.7 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடந்து நந்தனம் பகுதியில் அடையாறு வழியாக கடலில் சென்று சேர்கிறது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாம்பலம் கால்வாய் தொடங்கும் வித்யோதயா பிரதான சாலையில் தொடங்கி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியான பத்திகரை திட்ட பகுதி வழியாக, ஜி.என்.செட்டி சாலை, கிரியப்பா சாலை, விஜயராகவா சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை ஆகிய பகுதிகளில் மாம்பலம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து மாம்பலம் கால்வாயில் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட வேண்டிய சிறுபராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலர்கள், சென்னை குடிநீர் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாம்பலம் கால்வாய் கரையோரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், திடக்கழிவுகளும் கொட்டப்படுவதை கண்டறிந்தார். உடனடியாக தூய்மைப் பணிகளில் ஈடுபடும் உர்பேசர் சுமித் நிறுவனத்தின் அலுவலர்களை அழைத்து இப்பகுதிகளில் தூய்மைப் பணியினை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் திடக்கழிவுகள் வீடுகள் தோறும் வந்து சேகரிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், இந்த ஆய்வின்போது மாம்பலம் கால்வாய் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒரு சில இடங்களில் கழிவுநீர் இணைப்பு கால்வாயில் கலப்பதை பார்வையிட்டு, உடனடியாக அந்த இணைப்புகளை அடைக்கவும், இந்தப் பகுதிகளில் கழிவுநீர் இணைப்பு ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் மற்றம் மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE