இன்று உலக அகதிகள் தினம் | அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்களை எப்படி கருதலாம்? - மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசு

By எஸ். முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: உலகம் முழுவதும் 8 கோடி பேர் அகதிகளாக இருப்பதாகவும், ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடைவதாகவும் ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கியது முதல், அங்கிருந்த தமிழர்கள் உலகம் முழுவதும் புலம்பெயரத் தொடங்கினர். 1983 முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்துள்ளனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR), தமிழக மற்றும் இந்திய அரசின் மூலம் சுமார் 2.12 லட்சம் அகதிகள் இலங்கை திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 1,02,000 பேர் அகதிகள் முகாம்கள் மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்துவிட்டு வெளியிலும் தங்கியுள்ளனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், மார்ச் 22-ம் தேதி முதல் 25 குடும்பங்களைச் சேர்ந்த 90 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில்,அந்தக் கோரிக்கையை கருணையுடன் பரிசீலிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆனாலும், 2019 குடியுரிமைதிருத்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்களைப்போல, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கப்படவில்லை. 2012-ம் ஆண்டு இறுதியில் இருந்து அகதிகளாக வருவோரை தமிழக அரசு கைது செய்து, பாஸ்போர்ட் ஆவணச் சட்டம் மற்றும் சட்டவிரோதமாக வந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிறைகளில் அடைத்து வந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வந்த 90 இலங்கைத் தமிழர்களை மனிதாபிமான அடிப்படையில் அகதிகள் முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இவர்களுக்கு உதவித்தொகை எதுவும் வழங்கவில்லை. தற்போது அகதிகளாக வந்தவர்களை எப்படி வகைப்படுத்துவது என மத்திய அரசின் முடிவுக்காக தமிழக அரசு காத்திருக்கிறது.

மேலும், அவர்களுக்கு ஏற்கெனவே தமிழக முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று புகலிடம் வழங்க சிறப்பு அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE