சென்னை: அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் போராட்டம் காரணமாக, சென்னையில்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்தில் ஒப்பந்தஅடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு பணி வழங்கும் ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிஹார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிஹாரில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ரூ.700 கோடிக்கு மேல் அரசு சொத்து சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்திலும் அக்னி பாதைத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் பரவி வருகின்றன.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே நேற்று முன்தினம் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
சென்னையில் தடையை மீறியோ, அனுமதியின்றியோ போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதுபோலீஸார் வழக்கு பதிவு செய்வதுவழக்கம்.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, போலீஸார் வழக்கு பதிவு செய்யவில்லை.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் தொடர வாய்ப்புள்ளதாக உளவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுதது, சென்னை பல்லவன் இல்லம் அருகே அமைந்துள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு, போர் நினைவுச் சின்னம்ஆகிய இடங்கள் செல்லும் வழியை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும், மெரினா கடற்கரை, ஆளுநர் மாளிகை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தென் பிராந்திய ராணுவ மையத்தின் அலுவலகம், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ளது. எனவே, தலைமைச் செயலகம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம் வருவோர் விசாரணைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், நேப்பியர் பாலத்தில் இருந்து ரிசர்வ் வங்கி அருகே உள்ள பாலம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கொடிமரச் சாலையில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் சாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சென்னை முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை போலீஸார் பலப்படுத்தியுள்ளனர்.
ரயில்கள் ரத்து
இதற்கிடையில், அக்னி பாதை திட்ட எதிர்ப்பு போராட்டம் காரணமாக, வடமாநிலங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தனாபூர்-கேஎஸ்ஆர் பெங்களூரு (வழி: பெரம்பூர், காட்பாடி) சங்கமித்ரா விரைவு ரயில் (12296), கேஎஸ்ஆர் பெங்களூரு-தனாபூர் (வழி: காட்பாடி, பெரம்பூர்) விரைவு ரயில் (12295), கேஎஸ்ஆர் பெங்களூரு-பாட்னா அதிவிரைவு ரயில்(22354), கயா-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12389) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
அதேபோல, கேஎஸ்ஆர் பெங்களூரு-நியூ தின்சுகியாவுக்கு நாளை (ஜூன் 21) அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நியூ தின்சுகியா-கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு புறப்பட்ட விரைவு ரயில் (22502) ஹரிஸிங்கா-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே பகுதி ரத்துசெய்யப்பட்டது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago