சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்த குரல்கள் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும், குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கிறது.
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள குற்றப் புள்ளிவிவரங்களின்படி கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 2167 ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் நிகழ்த்தப்பட்ட 1832 குற்றச் செயல்களுடன் ஒப்பிடும்போது, 335, அதாவது 18.28% அதிகம் ஆகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 137 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை 148 ஆக அதிகரித்திருக்கிறது. மானபங்கம், பாலியல் சீண்டல்கள், கடத்தல், குடும்ப வன்முறைகள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் அதிகரித்துள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கடந்து குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து இருப்பது தான் கூடுதல் கவலையளிக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் 879 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் 4 மாதங்களில் 1060 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், 181, அதாவது 17.04 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன. தமிழகத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதை பொறுப்புள்ள குடிமக்களால் ஏற்கவே முடியாது.
» மேகதாது அணை விவகாரம் | தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஜூன் 22-ல் கண்டன ஆர்ப்பாட்டம்
» மேயர் Vs துணை மேயர் - கும்பகோணம் மாநகராட்சியில் வெடித்தது அதிகார மோதல்
ஒரு மாநிலத்தில் நல்லாட்சி நடப்பதை உறுதி செய்வதற்கான கூறுகளில் மிகவும் முதன்மையானது பெண்கள் அச்சமின்றி நடமாடுவதையும், வாழ்வதையும் உறுதி செய்வது ஆகும். ஆனால், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகி வருகிறது. பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் 370 ஆக இருந்தது. 2020-ஆம் ஆண்டில் 404 ஆகவும், 2021-ஆம் ஆண்டில் 442 ஆகவும் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இப்போதுள்ள நிலையே தொடர்ந்தால் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 444 ஆக இருக்கும். இது கடந்த காலங்களில் இல்லாத உச்சம் ஆகும். அதேபோல், மானபங்க வழக்குகள் 2019-ஆம் ஆண்டில் 803 ஆக இருந்தன. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே 892, 1077 ஆக அதிகரித்தது. இது நடப்பாண்டில் 4 மாதங்களில் 407 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டின் இறுதியில் புதிய உச்சத்தை எட்டக்கூடும்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் 4 மாதங்களை விட அதிகமாக இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த ஆண்டின் சராசரியுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் குறைவாகவே இருப்பது ஓரளவு மனநிறைவு அளிக்கிறது. இதேபோன்று அனைத்து குற்றங்களும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மகளின் நலனில் அக்கறை கொண்டோரின் எதிர்பார்ப்பும், விருப்பமும் ஆகும்.
பெண்களுக்கான குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களே நடக்காத சூழலை ஏற்படுத்த வேண்டும். அது தான் அரசு மற்றும் காவல்துறையின் சிறப்பான சாதனையாக இருக்கும். அந்த இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்டகால கோரிக்கை ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அத்தகைய தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனர் நிலையிலான அதிகாரி தலைமையில் செயல்பட்டு வருகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறையால் முடியாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான சூழல் அமைப்பை சீரமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தடையின்றி மது கிடைப்பதைத் தடுக்க மதுக்கடைகளை மூட வேண்டும்; பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளைப் பின்தொடர்ந்து சென்றும், கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் வழியில் குழுவாக கூடியிருந்தும் கிண்டல் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை வலுப்படுத்துவது, மகளிருக்கான சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கையை கிராமப்புறங்கள் வரை அதிகரிப்பது, பாலியல் சீண்டல் ஆபத்துகள் குறித்து குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு விழிப்புணர்வூட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago