அமெரிக்காவின் மயாமியில் அமைந்துள்ளது புளோரிடா சர்வதேசப் பல்கலைக் கழகம். அங்கே, தமிழ் மொழிக்கு தனித் துறை ஒன்றைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து முடித்திருக்கிறார் பேராசிரியர் கலைமதி.
அதே பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் துறையில் முதன்மைப் பேராசியராகப் பணிபுரிந்து வரும் இவர், உலகறிந்த தமிழ் எழுத்தாளர் முனைவர் தமிழ்குயில் கலியபெருமாளின் 2-வது மகள்.
புளோரிடா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடங்குவது பற்றி தமிழக அரசுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக சென்னைக்கு வருகை தந்திருந்தார். அவரை ‘இந்து தமிழ் திசை’க்காகச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
புளோரிடா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை ஒன்றை தொடங்க வேண்டிய தேவையும் அவசியமும் ஏன்?
அமெரிக்காவின் ஹார்வர்டு, கனடாவின் டொராண்டோ உள்ளிட்ட உலகில் உள்ள பல சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ள பொன்னான தருணம் இது. உலகம் முழுவதும் பரவி வாழும் 8.5 கோடி தமிழர்கள், தங்களுடைய தாய்மொழியான தமிழையும் அதன் பண்பாட்டுச் சிறப்பையும் உலக அரங்குக்கு எடுத்துச் செல்வதை முழு வீச்சில் செய்துவருகிறார்கள்.
தமிழகத்திலும், புலம்பெயர் சமூகத்திடமும் தமிழ், பாதுகாப்பாக இருக்கிறது. புலம்பெயர்ந்தோர், தங்களுடைய பிள்ளைகளுக்குத் தாய்மொழிக் கற்றலை ஒரு தவம்போல் செய்து வருகிறார்கள். இதன் அடுத்த கட்டமாக, மொழி, வரலாறு, கலை, பண்பாடு ஆகிய நான்கு தளங்களில் தமிழைப் பயிலவும் ஆய்வுசெய்யவும் வழிவகை செய்யும் கற்கை வசதிகளை உருவாக்குவது, தமிழர்கள் மிகுந்து வாழும் பகுதிகளில் உள்ள சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் அவசியமாகிறது.
இதுபோன்ற முயற்சிகள் மூலமே தமிழ் சமூகத்தினுடைய மொழியின் வலிமையும் வரலாற்று உண்மைகளும் உலக சமூகத்தைச் சென்றடையும். தாயகமான தமிழகத்தில் ஆட்சி புரியும் மாநில அரசு, தமிழை எல்லா வழிகளிலும் பரவலாக்கும் இதுபோன்ற முக்கியமான முயற்சிகளுக்குத் தாயுள்ளத்துடன் கரம் கொடுத்து வரும் இந்த நேரத்தில் இதைச் செய்யவேண்டியதும் அவசியமாகிறது.
தமிழுக்கு இருக்கை அமைப்பதிலிருந்து ஒரு துறையை அமைத்தல் என்பது எவ்வகையில் வேறுபடுகிறது? இதற்காக நீங்கள் செய்து முடித்துள்ள பணிகள் என்ன?
புளோரிடா மாநில நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருவதுதான் பாரம்பரியச் சிறப்புகொண்ட புளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகம் (FIU; www.fiu.edu). இப்பல்கலைக்கழகத்தின் ‘ஸ்டீவன் ஜே. கிரீன் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் அண்ட் பப்ளிக் அப்ஃபையர்ஸ்’ (Steven J. Green School of International and Public Affairs, sipa.fiu.edu) என்பது சர்வதேச மொழி, பண்பாட்டுக் கற்கைகளுக்கான ஒரு துறை.
இத்துறையின் கீழ் ‘தமிழ் - புலம்பெயர்ந்த தமிழர் ஆய்வுகளுக்கான நிறுவனம்’ (Tamil and Tamilar Diaspora Studies) என்ற பெயரில் தனித் துறையை நிறுவும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர். இதை ‘இன்ஸ்டிடியூட்’ (Institute) எனப் பல்கலைக்கழக ஆளுகை மொழியில் குறிப்பிடலாம். இதற்காக நானும் எனது கணவரும் இணைந்து 90 ஆயிரம் அமெரிக்க டாலர்களை தொடக்க நன்கொடையாகக் கொடுத்து பல்கலைக்கழகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். இத்துறையின் கீழ் பல்வேறு பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன.
இந்தியா, தமிழகம், இலங்கை, கனடா, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, நார்வே உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலிருந்தும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகை, நிதி நல்கை ஆகியவற்றின் மூலம் முதுகலைப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு, சிறு ஆராய்ச்சிகள், விரைவுக் கற்றல் ஆகிய வடிவங்களில் கல்விப் பணி அமையும்.
ஆய்வு மாணவர்களின் கற்கைக்கு வழிவகை செய்யவும், பண்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இசை, நடனம் உள்ளிட்ட தமிழ் கலைகளைக் கற்பிக்கவும் ஒன்றுக்கு மேற்பட்ட பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் வருகைதரும் பேராசிரியர்களையும் ஊக்கப்படுத்த இருக்கிறோம். இருக்கைகள் என்பவை இலக்கிய ஆய்வுகள், அவற்றைப் பதிப்பித்தல் ஆகியவற்றுடன் நின்றுவிடக் கூடும். ஆனால், ஒரு துறையின் கீழ் எத்தனை இருக்கைகளை வேண்டுமானாலும் நிறுவி அவற்றை ஒரு குறிப்பிட்ட ஆய்வுப் புலமாக அர்ப்பணிக்க முடியும்.
‘தமிழ் - புலம்பெயர்ந்த தமிழர் ஆய்வுகளுக்கான நிறுவன’த்தை நடத்தத் தேவைப்படும் நிதி ஆதாரம்...?
தமிழ் மொழி - தமிழ் இலக்கியம் - தமிழர்கலைகள், புலம்பெயர்ந்த தமிழர் ஆய்வுகள், வள்ளலார் கற்கை, வள்ளுவர் கற்கை (1.Tamil language and literature, 2. Tamilar arts3. Tamilar diaspora, 4.Vallalar studies, 5. Valluvar studies) ஆகிய 4 பிரிவுகளில் ஆய்வுகள், கற்றல் ஆகியன முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இத்துறையின் கீழ் தமிழ் இருக்கை, வள்ளுவர் இருக்கை, வள்ளலார் இருக்கை ஆகியவை அமைகின்றன. இது அரசு பல்கலைக்கழகம் என்பதால் ஹார்வர்டு போல் இருக்கை அமைக்க பெருந்தொகை ஆதார நிதியாகத் தேவையில்லை.
அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கு இத்துறை இயங்க 60 லட்சம் அமெரிக்க டாலர்கள் (6 மில்லியன்) நன்கொடை கிடைத்தால் போதுமானது. அதன் பின்னர் அறக்கட்டளையின் ஆதார நிதிக்குக் கிடைக்கும் வட்டிப்பணத்திலிருந்து நிறுவனம் தழைக்கத் தொடங்கும். தமிழக அரசு தாயுள்ளதுடன் இந்த முயற்சியை அணுகும் என்கிற நம்பிக்கை உள்ளது.
தவிர உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இதற்கு உதவ முன்வரவேண்டும். ஒரு இருக்கையையோ ஆய்வுப் புலத்தையோ தனி நபர்கள் (Named endowment) நன்கொடை மூலம் உருவாக்க முன்வரும்போது அவர்கள் விரும்பும் பெயர் அவற்றுக்குச் சூட்டப்படும். அது காலகாலத்துக்கும் நிலைக்கும்.
நன்கொடையை எந்த முயற்சிக்கு அளிக்கிறீர்கள் என்பதைக் குறிப்பிட்டு நேரடியாக புளோரிடா பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளை வங்கிக் கணக்குக்கே (FIU Foundation,Inc.) அனுப்ப வேண்டும். (நன்கொடை அளிப்பதற்கான இணைப்பு: https://give.fiu.edu/areas-of-giving/campaigns/tamilarstudiesinitiative/index.html) மிகக் குறைந்த தொகையைக்கூட நன்கொடையாக அளிக்க தமிழர்கள் அனைவரும் முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகப் பயணம் எப்படி அமைந்தது?
முதல் பயணம் வெற்றிகரமாகவே அமைந்தது. இந்தப் பயணத்தில் எனக்குக் கரம் கொடுத்த அகிலா ஐயங்கார், வழக்கறிஞரும் பத்திரிகையாளரும் ‘சட்டக் கதிர்’ இதழின் ஆசிரியருமான முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத், நட் நட்ராஜ், முனைவர் மஞ்சுளா, நிர்மலா அருணாசலம், அருணாசலம் ராமசேஷன், வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன். இந்த முன்னெடுப்பு குறித்த கடிதத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் டாக்டர் ஜே.ராமமூர்த்தி வழியாகக் கொண்டு சேர்த்தோம்.
புளோரிடா பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ அனுமதிக் கடிதத்தை, தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவை முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் நேரில் சந்தித்து சமர்ப்பித்தார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் நடராஜன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகர், சொற்பிறப்பியல் அகரமுதலி இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கே.விஜயராகவன் என, பல முக்கிய ஆளுமைகளையும் சந்தித்தேன்.
தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளைச் சந்தித்ததையும் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் உதவியும் உலகத் தமிழர்களின் உதவியுடன் மட்டும்தான் இந்த முன்முயற்சியை முன்நகர்த்த முடியும். இதுபற்றி இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள Kalai.Mathee@fiu.edu என்கிற எனது மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago