நூபுர் சர்மா கைதாக வாய்ப்பு: முகமது நபி விமர்சன வழக்கில் விசாரிக்க டெல்லி வந்தது மும்பை போலீஸ்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபிகளை தவறாக விமர்சனம் செய்த பாஜக செய்தித்தொடர்பாளர் நூபுர் சர்மா கைதாகும் சூழல் உருவாகி உள்ளது. இவரை நேரில் விசாரிக்க மும்பை போலீஸார் டெல்லிக்கு வந்துள்ளனர்.

கடந்த மே 26-ல் இந்தி தொலைக்காட்சி சேனல்களில் வழக்கம்போல் பாஜக செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா கலந்து கொண்டார். ஆனால், அன்றைய தினம் அவர் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான முகமது நபியை தவறாக விமர்சனம் செய்திருந்தார். இதனால், முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் இந்தியாவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவிலும் முஸ்லிம்கள் போராட்டம் தொடங்கினர்.

இதன்காரணமாக, நூபுர் சர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது பாஜக. எனினும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தவகையில் கடந்த 10ஆம் தேதி கான்பூரில் நடைபெற்ற முஸ்லிம்களின் ஆர்பாட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதேநிலை, அம்மாநிலத்தின் பிரயாக்ராஜ், பரேலி, சஹரான்பூர், முராதாபாத், கன்னோஜ், ஹாத்தரஸ் உள்ளிட்ட மாவட்டப் பகுதிகளிலும் ஏற்பட்டது.

இப்பிரச்சினையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த உ.பி. போலீஸார் 357 முஸ்லிம்களை கைது செய்தனர். மகராஷ்டிராவின் ஆசிரியரான முகம்மது குப்ரான் கான் என்பவர் மீது மும்பையின் தானே, பிதோய் ஆகிய காவல்நிலையங்களில் புகார் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, டெல்லியிலுள்ள நூபுர் சர்மா மீது அங்கு வழக்குகள் பதிவாகி இருந்தன. இதன் விசாரணைக்காக மும்பை போலீஸார் நுபுர் சர்மாவிற்கு நேரில் ஆஜராக நோட்டீஸும் அளித்திருந்தனர். இதனிடையே, மும்பை போலீஸார் நூபுர் சர்மாவை நேரில் விசாரிக்க இன்று காலை டெல்லிக்கு வந்தனர். இவர்கள் நூபுர் சர்மாவுடன் விசாரணைக்குப் பின் தேவைப்பட்டால் அவரை கைது செய்து மும்பை அழைத்துச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

இது குறித்து மகராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சரான திலிம் வால்ஸே பாட்டீல் கூறும்போது, ''இந்த வழக்கில் மும்பை போலீஸாருக்கு டெல்லி காவல்துறையினர் உதவுவார்கள் எனக் கருதுகிறேன். இன்று டெல்லி சென்றுள்ள மும்பை போலீஸார், நூபுர் சர்மாவை கைது செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நடவடிக்கைகள் மும்பை காவல்நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டின் வேறுசில மாநிலங்களிலும் நூபுர் சர்மா மீது வழக்குகள் பதிவாகி வருகின்றன. மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் நார்கேல்தங்கா காவல்நிலையத்திலும் ஒரு புகார் பதிவாகி உள்ளது. இதை அம்மாநிலத்தை ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸின் சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளரான அப்துல் சோஹில் பதிவு செய்துள்ளார். இதன் மீது நூபுரை ஜுன் 20 காலை 11.00 மணிக்கு நேரில் வந்து பதிலளிக்குமாறு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

இதனிடையே, நூபுர் சர்மா, பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நவீன் ஜிண்டால் உள்ளிட்ட 9 பேர் மீதும் டெல்லியின் சைபர் கிரைம் பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளது. எனினும், அவர்கள் இன்னும் டெல்லி போலீஸாரால் விசாரிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE