ஒடுகத்தூர் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.16.80 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடைபெற்ற ‘உங்கள் குரல் தெருவிழா’ நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொது பிரச்சினைகள் தொடர்பாக அந்தந்த பகுதிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உங்கள் குரல்- தெருவிழா என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேருராட்சியில் ‘உங்கள் குரல் தெருவிழா’ நிகழ்ச்சி நவீன் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முதுநிலை விற்பனை பிரதிநிதி சுரேஷ் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.சி.முனிசாமி, ஒடுகத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு முன்னிலை வகித்தார்.
அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, ‘‘பாரம்பரியம் மிக்க இந்து குழுமத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் நாளிதழாக ‘இந்து தமிழ் திசை’ வெளிவந்து கொண்டிருக்கிறது. பொதுவாக, இந்து தமிழ் நாளிதழில் செய்திகளை திரித்துப் போடமாட்டார்கள். யாருக்கும் அடி பணிய மாட்டார்கள். உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு பயன்படும்படி செய்திகளை தருகின்றனர்.
அணைக்கட்டு தொகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை முதல்வரின் கவனத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் கொண்டு சென்று இந்த ஆட்சியில் பெற்றுத் தருகிறேன். இந்து தமிழ் திசை நாளிதழின் இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு கண்டிப்பாக வளர்ச்சி கிடைக்கும்.
கடந்த 5 ஆண்டுகளில் நான் மட்டும்தான் உங்களிடம் சிக்கிக் கொண்டேன். நான் ஒரே ஆளாக இருந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனக்கு உறுதுணையாக பேரூராட்சி நிர்வாகம் வந்துள்ளது. உங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செய்து கொடுக்கும். இந்து தமிழ் திசை நாளிதழ் சுட்டிக்காட்டும் பிரச்சினைகள் எல்லாவற்றையும் நாங்கள் தீர்த்து வைக்க தயாராக இருக்கிறோம்.
மேல்அரசம்பட்டு அணை ரூ.50 கோடியில் கட்டவும், 2 கி.மீ தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டவும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒடுகத்தூர் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒடுகத்தூரின் மிகப்பெரிய பிரச்சினையான பேருந்து நிலையம் அரை குறையாக கட்டிவிட்டு சென்றுவிட்டார்கள். அந்த பேருந்து நிலையத்தை பெரிதாக விரிவாக்கி செய்து கொடுப்பேன் என இங்கு உறுதியளிக்கிறேன்.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் ஒடுகத்தூருக்கு தனி பைப்லைன் இருந்தது. அதை முறையாக பராமரிக்காத நிலையில் அந்த பைப்லைனை மாற்ற திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
அணைக்கட்டு தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வரும். நாங்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டு ஆனாலும் கரோனா பாதிப்பு, வெள்ள பாதிப்புகளை கடந்து கடந்த 4 மாதங்களா கத்தான் உங்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து வருகிறோம்’’ என்றார்.
ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்யாவதிபாஸ்கரன் பேசும்போது, ‘‘ஒடுகத்தூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நீராதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.16.80 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளோம். பேருந்து நிலையத்தில் ரூ.25 லட்சத்தில் கடைகள், ரூ.65.80 லட்சத்தில் சிமென்ட் சாலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் பெ.ரேணுகா தேவி மற்றும் கவுன்சிலர்கள், பேரூராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். உங்கள் குரல் தெருவிழா நிகழ்ச்சியை இந்து தமிழ் திசை நாளிதழுடன் வேலூர் புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம், வேலூர்-ஆற்காடு கணேஷ் செராமிக் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு செய்திருந்தார். முன்னதாக ஒடுகத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சரவணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில், இந்து தமிழ் திசை விற்பனை பிரிவு உதவி மேலாளர் டில்லி ராஜா நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago