அக்னி பாதை | 4 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் கல்வி எட்டாக் கனியாகிவிடும்: வைகோ

By செய்திப்பிரிவு

சென்னை: 4 ஆண்டுகள் படைப் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர் கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்திய ராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, "அக்னி பாதை" என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பாஜக அரசின் அமைச்சரவை, ஜூன் 14ம் தேதி ஒப்புதல் அளித்து உள்ளது.

இதன்படி, 17.5 வயது முதல் 21 வயது உடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம்; தற்போதைய கல்வித் தகுதி, உடற் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும்; புதிய திட்டத்தில் பணியில் சேருவோர் "அக்னி வீரர்கள்" என அழைக்கப்படுவர்; இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்ற வேண்டும்; அதன்பிறகு, ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள்.

25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவார்கள்; 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். இதுதான், அக்னி பாதைத் திட்டம். இந்தப் புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையின் முதன்மை நோக்கமே, இந்தியப் படையில் பெருகி வருகின்ற ஓய்வு ஊதியச் செலவுகளைத் தடுப்பதுதான் என்று, ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது, நியாயம் அற்ற தேர்வு முறை. இந்தியப் படையில் ஒதுக்கீடு பெற்று இருக்கின்ற பல்வேறு பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என முன்னாள் ராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக, பிகார், அரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பிகாரில் ரயிலுக்குத் தீ வைத்துள்ளனர். நாட்டில், வேலையின்மை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியப் படையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர். இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று, ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும்.

அதுமட்டும் அல்ல, மத்திய பாஜக அரசின் இன்னொரு உள்நோக்கம் இதில் ஒளிந்து இருக்கின்றது. "இந்திய ராணுவத்தைக் காவி மயம் ஆக்க வேண்டும் என்கின்ற, ஆர்எஸ்எஸ் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான மறைமுகத் திட்டமே "அக்னி பாதை" என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது. அதாவது, 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்வுச் சான்று இதழ் தரப்படும் என்கிறார்கள். ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள்.

4 ஆண்டுகள் படைப் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும். இதுதான் உள்நோக்கம். இந்தத் திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்." என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்