சென்னை: காவேரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மேகதாது அணை கட்டப்படாத போதே உரிய நீருக்குப் பதிலாக உபரி நீர் வந்துக் கொண்டிருக்கையில், மேகதாது குறித்து பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கூறுவதும், கர்நாடகத்திற்குரிய பங்கை பயன்படுத்துவது குறித்த திட்டம் மேகதாது அணை திட்டம் என்று கூறுவதும் தமிழகத்தின் பங்கினை பறிக்கும் செயலாகும்.காவேரி நதிநீர்ப் பங்கீட்டைப் பொறுத்தவரையில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் முழு உரிமை உண்டு. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பன்மாநிலங்களுக்கான நதிநீர்ப் பங்கீட்டில் கீழ்மடை மாநிலங்களின் அனுமதி இல்லாமல் மேல்மடை மாநிலம் தன்னிச்சையாக அணை கட்டிக் கொள்ள வழிவகை இல்லை. இந்தச் சூழ்நிலையில், தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மேகதாது அணை கட்டப்படும் என்று சொல்கின்றபோது அதை எதிர்க்கின்ற உரிமை தமிழகத்திற்கு நிச்சயம் உண்டு.
எனவே, தமிழகத்திற்கு மேகதாது அணை குறித்து பேச உரிமை இல்லை என்று சொல்லும் கர்நாடக மாநில முதல்வரின் கூற்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல் கடும் கண்டனத்திற்குரியது. இது ஒருபுறமிருக்க, கர்நாடக மாநில நீர்வளத் துறை அமைச்சர், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேகதாது அணை கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இதை எதிர்ப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றும் கூறியிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடுவதைத் தடுக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்ட திட்டமிட்டிருக்கும் செயல்தான் மனிதாபிமானமற்ற செயல் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மேலும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி தமிழகத்திற்கு 192 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்ற நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரரித்த உச்ச நீதிமன்றம் பெங்களூரு குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டுதான், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிடப்பட்ட தமிழகத்தின் பங்கான 192 டிஎம்சி நீரை 177.25 டிஎம்சி அடியாக குறைத்து உத்தரவிட்டது. அதாவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கர்நாடகாவின் நீர்ப் பங்கீடு அளவு 270 டிஎம்சி-யிலிருந்து 284.75 டிஎம்சியாக உயர்த்தப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் பெங்களூரின் குடிநீர்த் தேவைக்காக மேகதாது அணை கட்டப்படும் என்று சொல்வது நியாயமற்ற செயல். தற்போது மேகதாது அணை குறித்த பொருள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து 17-06-2022 அன்று நடைபெறவுள்ள 16-வது காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக செய்தி வந்த நிலையில், தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு, மேற்படி கூட்டம் 23-06-2002 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காவேரி மேலாண்மை வாரியத்தின் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டாலும், மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்கப்படாது என்று அறிவிக்கப்படவில்லை.
காவேரி மேலாண்மை ஆணையத்தின் முக்கியமான பணி என்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவேரி நீரின் இருப்பை கண்காணிப்பது, பிரித்தளிப்பது, முறைப்படுத்துவது மற்றும் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகும். இதைவிடுத்து, தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான மேகதாது அணை கட்டும் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து காவேரி மேலாண்மை வாரியத்தில் விவாதிக்கப்படும் என்று கூறுவது ஆணையத்தின் அதிகார வரம்பை மீறிய செயலாகும்.
அதிகார வரம்பிற்கு உட்படாத, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு பொருளை ஆணையம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது. எனவே, முதல்வர் காவேரி மேலாண்மை வாரியத்தில் மேகதாது அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." என்று வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago