புதுச்சேரி ஹெலிபேடு மைதானத்தில் ஜூன் 19-ல் திருமலை திருப்பதி சீனிவாச திருக்கல்யாணம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் வரும் 19-ல் திருமலை திருப்பதி சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. இனி ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் தலைவரும் அமைச்சருமான லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறியது: ''திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம் மற்றும், புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் ஆகியவை இணைந்து வரும் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாணத்தை நடத்துகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது மீண்டும் திருக்கல்யாணம் நடக்கிறது. கரோனா குறுக்கிட்டதால் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தது. இம்முறையும் திருமலையில் இருந்து உற்சவர் கொண்டு வரப்பட்டு திருமலையின் அர்ச்சகர்கள் கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.

வரும் 18-ம் தேதி இரவே உற்சவர் திருமலையிலிருந்து புதுச்சேரி வந்தடைகின்றனர். லாஸ்பேட்டை விவேகானந்தா மேனிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 19-ம் தேதி காலை சுப்ரபாதம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கும், மக்களும் சேவிக்கலாம். அதையடுத்து மாலை உற்சவர் ஹெலிபேடு சென்றடைவார். அன்றைய தினம் மாலை 4.15 மணிக்கு கல்யாண உற்சவம் தொடங்கி இரவு 9 மணிவரை நடக்கிறது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர்ர் ரங்கசாமி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல்அலுவலர் ஜவகர் ரெட்டி, கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி, தேவஸ்தான உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

புதுவையில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்துக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஹெலிபேடு மைதானத்துக்கு இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும். வெயில் காலமாக இருப்பதால் இருக்கை வசதியும் செய்யப்பட உள்ளது. கரோனா எச்சரிக்கையால் பக்தர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி ஆண்டுதோறும் திருக்கல்யாணத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். நேருவீதியில் தேவஸ்தான திருக்கோயில் கட்டுமானப்பணிகள் நடக்கத்தொடங்கியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டியின்போது மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE