சென்னை: கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்படுவது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''பொதுத்தேர்தல்களில் ஒருவர் ஒரு தொகுதிக்கும் கூடுதலாக போட்டியிடக் கூடாது; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. சமவாய்ப்புடன் தேர்தலை நடத்துவதற்கான இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.
இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ்குமார், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு வசதியாக 6 தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
''ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுவதை தடை செய்தல், தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தடை செய்தல், 18 வயது நிறைவடைந்தவர்களை 4 தகுதி காண் நாட்களை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தல், கட்சிகளை பதிவு நீக்கம் செய்வதற்கான அதிகாரம், ரூ.2000-த்திற்கும் கூடுதலாக பெற்ற அனைத்து நன்கொடைகளையும் அரசியல் கட்சிகள் தெரிவிப்பதை கட்டாயமாக்குதல்'' ஆகியவை தான் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 6 சீர்திருத்தங்கள் ஆகும்.
» கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள வசதி: தமிழக அரசு உத்தரவு
» எளிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்து, கொலை செய்து மூடி மறைப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? - சீமான்
அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய அவற்றின் நன்கொடை விவரங்கள் வெளியிடப்படுவதை கட்டாயமாக்குவதும், இந்தியாவில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 90%க்கும் மேற்பட்டவை தேர்தலில் போட்டியிடாமல் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் செயலில் மட்டும் ஈடுபடுவதால் அவற்றை பதிவு நீக்கம் செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டியதும் தவிர்க்க முடியாதவை ஆகும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விட்டது.
18 வயது நிறைவடைந்தவர்களை 4 தகுதி காண் நாட்களை அடிப்படையாக வைத்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதும் ஜனநாயகத்தை வலுப்படுத்த மிகவும் அவசியமானது ஆகும். இப்போது ஜனவரி 1-ஆம் தேதியை மட்டுமே தகுதி காணும் நாளாக வைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுகிறது.
உதாரணமாக 2024-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி காணும் நாளாக வைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் போது, அந்த ஆண்டின் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் 18 வயது நிறைவடையும் ஒருவரால் அந்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க முடியாது. மாறாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளை தகுதி காணும் நாளாகக் கொண்டு ஆண்டுக்கு நான்கு முறை புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் போது இந்தக் குறையை களைய முடியும் என்பது உறுதி.
ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றால், ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் பதவி விலக வேண்டும்; அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது மக்களின் வரிப்பணம் வீணாக செலவழிக்கப்படுவதற்கு தான் வழி வகுக்கும்.
இது நியாயமல்ல. இந்தியாவில் சில பத்தாண்டுகளுக்கு முன் ஒருவர் எத்தனைத் தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை தான் இருந்தது. அது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது என்பதால் தான், ஒருவர் அதிகபட்சமாக இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற நிலை ஏற்படுத்தப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது ஒருவருக்கும் ஒரு தொகுதி என்ற நிலையை உருவாக்குவது அவசியம் ஆகும். தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரை கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள 6 சீர்திருத்தங்களில் முதன்மையானது தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட நாளில் இருந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையோ, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளையோ வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பது தான். கருத்துக் கணிப்புகள் அறிவியல்பூர்வமானது என்ற நிலையிலிருந்து அரசியல் பூர்வமானவையாக மாறி விட்டன. ஒரு கட்சிக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள் திரிக்கப்படுகின்றன; திணிக்கப்படுகின்றன.
அவ்வாறு திணிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் பணபலமும், அதிகார பலமும் படைத்தக் கட்சிகளுக்கு ஆதரவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று பாமக கடந்த பல பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.'' என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago