ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க பிரத்யேக செயலி அறிமுகம் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு உள்ளிட்ட பணிப் பலன்களுக்கு விண்ணப்பிக்க பிரத்யேக செல்போன் செயலியை பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தற்செயல் விடுப்பு உள்ளிட்ட பணிப் பலன்களை பெற நேரடியாக விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளது. இதை எளிமையாக்கும் விதமாக பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல் மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக உயர் அதிகாரியிடம் நேரடியாக விண்ணப்பித்து வந்தனர். இதில் ஆசிரியர்களுக்கு பல்வேறு சிரமங்களும், கால விரயமும் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் செல்போன் மூலமாகவே விடுப்பு உள்ளிட்ட பணிப் பலன்களுக்கு விண்ணப்பிக்கும் செயலி (TNSED Schools) உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டிலேயே இது செயல்படுத்தப்படுகிறது.

இதுதொடர்பான தகவல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களுக்கு தெரிவித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுப்பு உள்ளிட்ட பணிப் பலன்களுக்கு விண்ணப்பிக்கும் செயலி (TNSED Schools) உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE