சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகக் குழு முடிவெடுக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில்பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். பின்னரே, தேர்தல் ஆணையத்தில் அதை சமர்ப்பிக்க முடியும். இதையொட்டி, அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் மற்றும் மாவட்டச் செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொதுக்குழு, செயற்குழுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் தரப்பு விரும்பினாலும், சசிகலா ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கருதி, இதை பழனிசாமி தரப்பு எதிர்க்கிறது.
இந்நிலையில், யாருக்கு அழைப்பு விடுப்பது, பேசுவதற்கான வாய்ப்பு யாருக்கு வழங்குவது என்பது குறித்தும், என்னென்ன பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானம் கொண்டுவருவது என்றும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் பாஜகதான் பிரதானஎதிர்க்கட்சி என்று பேசிவரும் நிலையில், இதற்கு பதில் அளிப்பது குறித்தும், விரைவில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி பேசும்போது, ‘‘சசிகலா குறித்தும், பொதுச்செயலர் பதவி குறித்தும் யாரும் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் பேசவோ, கோஷம் எழுப்பவோ வேண்டாம். கூட்டத்தில் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர்.
ஒற்றைத் தலைமை கோஷம்
அதிமுக தலைமை அலுவலகத்தின் முதல் தளத்தில், பூட்டிய அறையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கட்சி அலுவலக வளாகத்தில் `ஒற்றைத் தலைமை வேண்டும்' என்று சில நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். யார் அந்த ஒற்றைத் தலைமை என்று கூறாமல், தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால், சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அலுவலகத்தின் கீழ் தளத்தில் இருந்த நிர்வாகிகள், அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
அதேசமயம், நான்கரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும், ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் விவாதப் பொருளாகியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது: வரும் 23-ம் தேதி அமைதியான முறையில் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பெரும்பான்மை தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் ஆகியோர், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர். எனினும், யார் என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கட்சி நிர்வாகக் குழு முடிவெடுத்து அறிவிக்கும்.
அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கட்சிக்கு ஒற்றைத்தலைமை தேவை என்று கருதுகின்றனர். காலத்தின் தேவை கருதி, இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600-க்கும் மேற்பட்டோர், 2,500 சிறப்பு அழைப்பாளர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர இடம் வேண்டும். எனவே, சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு இல்லை.
சசிகலாவுக்கும் கட்சிக்கும் எந்தசம்பந்தமும் இல்லை. தொடர்புஇல்லாதவர் குறித்து பொதுக்குழு வில் விவாதித்து, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் நாங்கள்தான் முதன்மையான கட்சி. மீதமுள்ளவர் கள் எதிரிக் கட்சிகள் இல்லை, உதிரிக் கட்சிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago