அதிமுகவின் வெற்றிக்கு தமிழகத்தின் மேற்கு மண்டலம் பெரிதும் கைகொடுத்திருக்கிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் என 8 மாவட்டங்களைக் கொண்ட மேற்கு மண்டலத்தில் 57 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 45 தொகுதிகளை அதிமுகவும், 12 தொகுதிகளை திமுகவும் கைப்பற்றியுள்ளன.
கொங்கு மண்டலத்தில் ‘இரட்டை இலை’ மீதான விசுவாசம் மற்றும் பண பலம் அதிமுகவுக்கு சாதகமானதாக கூறப்படுகிறது. பாமக, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பிரித்ததும் திமுகவின் தோல்விக்கு காரணம்.
கிருஷ்ணகிரி
இந்த மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ஊத்தங்கரை, பர்கூர், ஓசூர் ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவும், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தளி ஆகிய 3 தொகுதிகளில் திமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஊத்தங்கரை, பர்கூரில் திமுக வலுவாக இருந்தாலும் பாமக வேட்பாளர்கள் கணிசமாக வாக்குகளை பிரித்தது திமுகவுக்கு பாதகமாக அமைந்துவிட்டது. ஓசூரில் 3 முறை வென்ற காங்கிரஸின் கோபிநாத் நான்காவது முறையாக போட்டியிட்டார். ஆனாலும், அங்கு பாஜக பெற்ற 28,850 வாக்குகள், இந்த முறை காங்கிரஸை கவிழ்த்துவிட்டது.
கிருஷ்ணகிரியை பொறுத்தவரை தொகுதியை கவனிக்கவில்லை என்று கே.பி.முனுசாமி மீதிருந்த அதிருப்தியும், தளி தொகுதியில் ராமச்சந்திரன் மீதான குற்றப் பின்ன ணியும் திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டன. வேப்பனஹள்ளி யில் வெற்றி பெற்ற திமுகவின் முருகன், ஏற்கெனவே அங்கு ஒன்றிய தலைவராக இருந்தவர். மக்களிடம் நன்கு அறிமுகமானவர். இதுவே அவருக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
தருமபுரி
இங்குள்ள 5 தொகுதிகளில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) தொகுதிகளில் அதிமுகவும், பென்னாகரம், தருமபுரி ஆகிய தொகுதிகளில் திமுகவும் வென்றுள்ளன. பாலக்கோடு அதிமுகவின் கோட்டை. இங்கு 4-வது முறையாக கே.பி.அன்பழகன் வெற்றி பெற்றிருப்பது சகஜமான ஒன்று. பாப்பிரெட்டிப்பட்டியில் 17-வது சுற்று வரை பாமக வின் சத்தியமூர்த்திதான் முன்னணியில் இருந்தார். ஆனால், கடைசி 6 சுற்றுகளில் கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட் டிப்பட்டி பகுதிகளில் உள்ள கவுண்டர் சமூக வாக்குகள், அதிமுக வேட்பாளர் பழனியப்பனை கரைசேர்த்துவிட்டன.
அரூர் தொகுதி இடதுசாரிகளுக்கு வாய்ப்புள்ள தொகுதி. தொகுதிப் பங்கீட்டில் அது விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது. இதுவே அதிமுகவின் வெற்றிக்கு காரணமாகிவிட்டது. பென்னாகரத்தில் திமுக வேட்பாளர் இன்பசேகரனின் தந்தையான மறைந்த பெரியண்ணனுக்கு இருந்த செல்வாக்கு அங்கு அந்தக் கட்சியின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. அதேபோல தருமபுரியின் தடங்கம் சுப்பிரமணி எளிமையானவர் என்ற இமேஜ் அங்கு திமுகவை வெற்றி பெற வைத்திருக்கிறது.
சேலம்
இங்குள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக அள்ளியி ருக்கிறது. சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் திமுகவின் ராஜேந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார். வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்குப் பிறகு மூன்றாக பிரிந்து கிடந்த திமுகவின் கோஷ்டிப் பூசலே இதற்கு காரணம் என்கின்றனர். தவிர அனைத்து தொகுதிகளிலும் பாமக பெற்ற கணிசமான வாக்குகள் திமுகவின் வெற்றியை தட்டிப் பறித்துவிட்டது. மேட்டூரில் 49,939, ஓமலூரில் 48,721, சேலம் மேற்கில் 29,982, வீரபாண்டியில் 17,218 என அதிக அளவுகளில் பாமக பெற்ற வாக்குகள் திமுகவை குப்புற தள்ளிவிட்டிருக்கிறது.
நாமக்கல்
இங்குள்ள 6 தொகுதிகளில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளை யம் ஆகிய 5 தொகுதி கள் அதிமுக வச மானது. பரமத்தி வேலூர் மட்டும் திமுகவுக்கு கிடைத்துள்ளது. இந்த பகுதியில் ஆளும் கட்சியின் மீது அதிருப்தி இருந்தாலும் பல்வேறு கட்சிகள் வாக்குகளை பிரித்தது திமுகவுக்கு பாதகமாக போய்விட்டது.
இங்கு 6 தொகுதிகளிலும் ஈஸ்வரனின் கட்சி தனித்துப் போட்டியிட்டு 31,462 வாக்குகளை பெற்றதும் குமாரபாளையம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டி யிட்ட தேமுதிக 28,095 வாக்குகளை பெற்றதும் திமுகவுக்கு பாதகமானது. குறிப்பாக திருச்செங்கோட்டில் சுயேச்சையாக போட்டியிட்ட முன் னாள் மதிமுக பிரமுகர் முத்துமணி, கணிசமான வாக்குகளை பிரித்ததால் அங்கு 3 ஆயிரம் வாக்குகளில் திமுக தோற்றது.
ஈரோடு
இங்குள்ள 8 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளி விட்டது அதிமுக. பிரச் சாரத்தின் தொடக்கத்தில் அதிமுகவின் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மீது கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் அதிருப்தி இருந்தது.
ஆனால், இவர்கள் இறங்கி வந்து எல்லோரையும் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். இதனால் தொண்டர்கள் வேறுபாடுகளை மறந்து கட்சியின் வெற்றிக்கு உழைத்தனர். இதுவே அதிமுகவின் வெற்றிக்கு காரணமாகிவிட்டது. திமுகவில் முத்துசாமிக்கு முதலில் ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அவருக்கு வெற்றி உறுதியாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தேமுதிகவில் இருந்து பிரிந்து வந்த சந்திரகுமாருக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டதால் முத்துசாமி ஈரோடு மேற்குக்கு மாற்றப்பட்டார். இதுவே அவரது தோல்விக்கு காரணமாகிவிட்டது.
நீலகிரி
உதகமண்டலம் தொகுதி பொதுவாகவே காங்கிரஸ் கட்சியின் கோட்டை. புத்திசந்திரன் மீதான படுகர்களின் எதிர்ப்பு கூடுதலாக கைகொடுக்கவே அங்கு காங்கிரஸின் கணேஷ் வெற்றி பெற்றார். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மலையக தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி கூடலூர் (தனி). அவர்களின் ஆதரவால் திமுக வெற்றி பெற்றுள்ளது. குன்னூர் தொகுதியில் திமுக சார்பில் படுகர் சமூகத்தைச் சேர்ந்த இளித்துரை ராமச்சந்திரன், குண்டன் ஆகியோர் போட்டியிட விரும்பினர். ஆனால், முபாரக் போட்டியிட்டார். உட்கட்சி பூசலால் தொகுதியை இழந்துள்ளது திமுக.
கோவை
இங்குள்ள 10 தொகுதிகளில் சிங்கா நல்லூர் தவிர 9 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியிருக்கிறது. திமுகவுக்கு சாதகமான கோவை தெற்கு தொகுதி, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. அதேபோல திமுகவுக்கு சாதகமாக இருந்த கோவை வடக்கு, கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் பணம் விளையாடியதில் திமுக துவண்டுவிட்டது என்கின்றனர். மேலும், 7 தொகுதிகளில் பாஜக கணிசமான அளவு வாக்குகளை பிரித்ததும் அதிமுக வெற்றி பெற காரணமாகிவிட்டது.
திருப்பூர்
இங்குள்ள தொகுதிகளில் 6 தொகுதிகளில் அதிமுகவும் 2 தொகுதிகளில் திமுகவும் வென்றுள்ளன. காங்கேயம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் தேர்தல் பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆனந்தன் பொறுப்பேற் றுக்கொண்டார். இங்கெல்லாம் விடிய விடிய வேலை பார்த்துள்ளனர்.
மடத்துக்குளத்தில் அதிமுக வேட்பாளர் பொன்னுசாமி மீது சொந்தக் கட்சியினரிடம் அதிருப்தி நிலவியது. இதுவே அங்கு திமுக வெற்றி பெற காரணமாகிவிட்டது. தாராபுரத்தில் சிட்டிங் எம்எல்ஏவான பொன்னுசாமி மீதான அதிருப்தி, காங்கிரஸுக்கு கைகொடுத்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago