சென்னை: கரோனா காரணமாக மாணவர்களின் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைக் குறைப்பதற்கான “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட இருக்கும் “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளுர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் “எண்ணும் எழுத்தும்” மாதிரி வகுப்புகளைப் முதல்வர் பார்வையிட்டார்.
இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்" கரோனா பெருந்தொற்றினால் தமிழகப் பள்ளிகள், 19 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு, வகுப்புகள் இல்லாத நிலையில் மாணவர்களின் கற்றலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக, தமிழ்நாடு அரசு, 2022-23ம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, 2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
» சென்னை டிடிகே. சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
» அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
கரோனா காரணமாக தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3ம் வகுப்புக் குழந்தைகள், தங்கள் வகுப்பிற்குரிய கற்றல் நிலையை அடைந்திருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, மூன்றாம் வகுப்புக் குழந்தைகள், இரண்டாம் வகுப்புக்குரிய கற்றல் அடைவைப் பெறவில்லை. இரண்டாம் வகுப்புக் குழந்தைகள் முதல் வகுப்புக்குரிய கற்றல் அடைவைப் பெறவில்லை. இவ்வாறாக, 19 மாத இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள், அந்தந்த வகுப்பிற்குரிய திறன்களைப் பெறாமலே வகுப்பை நிறைவு செய்து உள்ளனர்.
எனவே குழந்தைகள் இழந்த கற்றலைப் பெறுவதற்கு உதவியாகப் பள்ளிக் கல்வித்துறையின் முன்னோடித் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம், கற்றல் நிலைக்கேற்பக் கற்பித்தல் என்ற அணுகுமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப எண்ணும் எழுத்தும் திட்டத்தில் அரும்பு, மொட்டு, மலர் என்னும் பெயர்களில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களுக்கு சூழ்நிலையியல் பாடத்திறன்களையும் ஒருங்கிணைத்து முதல்முறையாக நிலைவாரியான பயிற்சிநூல்கள் உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சிநூல்கள் வாயிலாக மூன்றாம் வகுப்புக் குழந்தைகள், 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கான பாடத்திறன்களையும் இரண்டாம் வகுப்புக் குழந்தைகள், முதல் வகுப்புக்கான பாடத்திறனையும் அடைவதற்கான வாய்ப்பைப் பெறுவர். இப்பயிற்சி நூல் செயல்பாடுகளைக் குழந்தைகள் செய்து கற்பதற்கு வழிகாட்டி உதவும்வகையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்பிப்பதற்கான தெளிவான, விரிவான விளக்கங்களுடன் கூடிய ஆசிரியர் கையேடுகளும் முதல்முறையாக உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன.
பாடவாரியாக உருவாக்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளும் பயிற்சி நூல்களும் ஒவ்வொரு குழந்தையும் தனக்குத் தெரிந்த கற்றல் நிலையிலிருந்து படிப்படியாகத் தனது கற்றலை வளர்த்துக் கொண்டு செல்ல உதவும். மேலும், குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையில், பாடல் களம், கதைக் களம், செயல்பாட்டுக் களம், படைப்புக் களம், படித்தல் களம் மற்றும் பொம்மலாட்டக் களம் போன்றவை அமைக்கப்பட்டு குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் கற்றல், கற்பித்தல் நடைபெறும். இதனால், குழந்தைகளுக்குப் பிடித்தமான கதைகள், பாடல்கள், விளையாட்டுகள், புதிர்கள், கலைகள் மற்றும் கைவினைப் பொருள்களால் எண்ணும் எழுத்தும் வகுப்பறை நிறைந்திருக்கும்.
எண்ணும் எழுத்தும் வகுப்பறையின் செயல்பாடுகள், குழந்தைகள், கவனச்சிதறல் இன்றிப் பங்கேற்றுக் கற்கவும் துணைக்கருவிகளின் உதவியுடன் பாடங்களைப் புரிந்து ஆர்வமுடன் கற்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை குழந்தைகள், தனியாகவும் இணைந்தும் குழுவாகச் சேர்ந்தும் அச்சமின்றிக் கற்க உதவிபுரியும். மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கல்வி நிருவாகக் கண்காணிப்பும் விளையாட்டு வழி மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago