அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்! என்று பாமக நிறுவனர் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்றி வரும் 219 ஒப்பந்தத் தொழிலாளர்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பது அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது.

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் 75 நிரந்தரப் பணியாளர்களும், 219 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மாதத்திற்கு 26 நாட்கள் பணி வழங்கப்பட்டு, தினசரி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. எந்தவித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்படுவது நாடு முழுவதும் வழக்கமாக உள்ளது. அதன்படி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களில் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணியாற்றியவர்களுக்கு பணிநிலைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவர்களுக்கு தமிழக அரசு பணிநிலைப்பு வழங்க மறுத்திருப்பது மட்டுமின்றி, இனி எந்தக் காலத்திலும் அவர்கள் பணிநிலைப்போ அல்லது பணிப் பாதுகாப்போ கோர முடியாத அளவுக்கு அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

அதன்படி, 219 ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் தனியார் நிறுவனமே ஊதியம் வழங்கும். அவர்களுக்கான ஊதியத்துடன் ஒரு குறிப்பிட்ட தொகையை சேவைக் கட்டணமாக சேர்த்து தமிழக அரசிடம் இருந்து அந்த நிறுவனம் பெற்றுக்கொள்ளும். இது ஒப்பந்தப் பணியாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். தனியார் நிறுவனத்திடம் தாரைவார்க்கப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள், இனி எந்த உரிமையையும் அரசிடம் கோர முடியாது. அதையும் கடந்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்கு பணிப் பாதுகாப்பும் இருக்காது. தனியார் நிறுவனம் நினைத்தால் அவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, தங்களுக்கு வசதியான வேறு பணியாளர்களை நியமித்துக் கொள்ள முடியும்.

அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் தொழிலாளர்கள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதன் பாதிப்புகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி, இஎஸ்ஐ ஆகியவற்றை இதுவரை அரசே செலுத்தி வந்தது. இப்போது, இவை தொழிலாளர்களின் ஊதியத்தில் இருந்து தனியார் நிறுவனத்தால் பிடிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மாதத்திற்கு 26 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்தது. இப்போது பணிநாட்கள் 25 நாட்களாக குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் ஒவ்வொரு ஒப்பந்தத் தொழிலாளருக்கும் குறைந்தது 10% வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒப்பந்தத் தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் புதிய கலாச்சாரம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன், சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டனர். கடந்த ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நேரடியாக ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக் கழகம் போன்றவற்றில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமிப்பதும், அரசின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத உழைப்புச் சுரண்டல் ஆகும். இந்த முறையில் தொழிலாளர்களின் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படுகின்றன. தொழிலாளர்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.

இதேநிலை தொடர்ந்தால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியாளர்களே இல்லாத நிலை உருவாகிவிடும். இதன் மூலம் மக்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஊதியத்துடன் அரசுப் பணி வழங்கும் கடமையிலிருந்து அரசு தவறிவிடும். அதுமட்டுமின்றி, அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு பொறுப்புடைமை இல்லாத நிலை ஏற்படும். இதனால், ஒரு கட்டத்தில் அரசு நிர்வாகமே நிலைகுலையும் ஆபத்து உருவாகிவிடும்.

கடந்த ஆட்சியில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட போது, அதை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணிநிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சியிலும் அதே நிலை தொடர்கிறது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

வண்டலூர் உயிரியல் பூங்கா தொழிலாளர்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை குடிநீர் வாரியம், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையிலும், அவுட்சோர்சிங் அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களையும், அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அவர்களில் தகுதியான அனைவருக்கும் பணிநிலைப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்