மேகதாது குறித்து காவிரி ஆணையம் விவாதிக்க உச்ச நீதிமன்றத்தில் தடைபெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்போவதாக காவரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் கூறுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''டெல்லியில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் கூறியிருக்கிறார். ஆணையத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதையும் மீறி மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப் போவதாக ஆணையத் தலைவர் கூறுவது கண்டிக்கத்தக்கது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கடந்த 7-ஆம் தேதி செய்திகள் வெளியான போது, ஆணையத்தின் செயலுக்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்தது பாமக நிறுவனர் ராமதாஸ் தான். மேகதாது அணை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் கிடையாது; நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையம், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்ற நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக எவ்வாறு செயல்பட முடியும்? மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து எவ்வாறு ஆணையம் விவாதிக்க முடியும்? என்று வினா எழுப்பிய ராமதாஸ், இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட வலியுறுத்தினார்.

தமிழக அரசும் அதே காரணங்களின் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததுடன், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக்கூடாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதமும் எழுதியது. ஆனால், தமிழக அரசின் எதிர்ப்பை பொருட்படுத்தப் போவதில்லை என்றும், திட்டமிட்டபடி வரும் 17-ஆம் தேதி கூட்டத்தில் மேகதாது குறித்து கண்டிப்பாக விவாதிக்கப்படும் என்றும் ஆணையத் தலைவர் ஹல்தர் கூறியிருப்பது ஒருதலைபட்சமானது என்பது மட்டுமின்றி, மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிக்க காவிரி ஆணையம் துடிப்பதையே காட்டுகிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. ஆணையத்தின் அதிகார வரம்புகளை குறிப்பிட்டு மத்திய அரசு வெளியிட்ட அரசாணை தான் ஆணையத்தின் அரசியலமைப்பு சட்டமாகும். அதன்படி தான் ஆணையம் செயல்பட வேண்டும். மாறாக, மேகதாது அணை குறித்து விவாதித்து முடிவெடுக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு வழக்கறிஞர் சட்டக் கருத்து வழங்கியதால் மட்டுமே, அந்த அதிகாரம் வந்து விடாது. மத்திய அரசு வழக்கறிஞரின் சட்டக் கருத்து உச்சநீதிமன்றத்தில் செல்லாது.

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிப்பது இன்றைய நிலையில் அதி முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் இல்லை. ஆணையத்தின் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு அடுத்த சில நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அதன்பின்னர் இந்த விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், இந்த விஷயத்தில் ஆணையம் அவசரம் காட்டுவது ஏன்?

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக இப்போது இருக்கும் ஹல்தர், மத்திய நீர்வள ஆணையத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான உறுப்பினராக இருந்த போது தான் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தவரே அதை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கத் துடிப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. இதை தடுக்காவிட்டால், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு இன்னும் விரைவாக செயல்பட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை கால அமர்வு நாளை கூடுகிறது. அந்த அமர்வின் முன் தமிழக அரசு வழக்கறிஞர் நேர் நின்று வழக்கை உடனடியாக விசாரிக்கும்படி முறையிட்டு தடை பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மேகதாது விஷயத்தில் ஒரு சார்பாக செயல்படும் ஆணையத் தலைவரை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்