சென்னையில் ரூ.905 கோடியில் திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டம்: நெரிசல், காற்று மாசுவை குறைக்க நடவடிக்கை

By ச.கார்த்திகேயன்

சென்னை மாநகராட்சி, மாநகரக் காவல் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து ரூ.905 கோடியில் திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உள்ளன.

சென்னை மாவட்டம் 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. 22 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள் தொகை 85 லட்சமாக உள்ளது. 15 லட்சம் பேர் சென்னைக்கு தினமும் வந்து செல்கின்றனர். இங்கு சராசரியாக ஒரு சதுர கிமீ பரப்பில் 26 ஆயிரம் பேரும், வடசென்னை போன்ற பகுதிகளின் சில இடங்களில் 65 ஆயிரம் பேரும் வசிக்கின்றனர்.

60 லட்சம் வாகனங்கள்

தமிழக போக்குவரத்துத் துறை தரவுகளின்படி சென்னையில் கடந்த12 ஆண்டுகளில் மட்டும் 35,56,886 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டுஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி சென்னையில் பொது போக்குவரத்துக்காக 2,49,133 வாகனங்கள், சொந்த பயன்பாட்டுக்காக 57,57,584 வாகனங்கள் என மொத்தம் 60,16,717 வாகனங்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 47,56,320 இருசக்கர வாகனங்கள், 9,60,084 தனிநபர் கார்களும் அடங்கும்.

மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்துக்கு ஏற்றவாறு மாநகர சாலைகளோ, அதன் அகலமோ பெருகவில்லை. இருக்கும் சாலையிலேயே மேம்பாலங்கள் மற்றும் போக்குவரத்து மேலாண்மை போன்றவற்றை செய்து ஒழுங்குபடுத்த வேண்டிய நிலையுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நீடித்த நிலையான போக்குவரத்து சேவையை வழங்க மாநகராட்சி சார்பில் மாநகர காவல்துறை மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து ரூ.905 கோடியில் திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின்கீழ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) எல்லையான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கிய 1,189 சதுர கிமீ பரப்பளவுக்குள் போக்குவரத்து மேலாண்மை செய்யக் கூடிய பகுதிகள் குறித்து காவல்துறை மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்மூலம் திறன்மிகு போக்குவரத்து மேலாண்மை திட்டம் ரூ.905 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி 165 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு நவீன சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன. அங்கு பொருத்தப்படும் கேமராக்கள் வாகனங்களின் அளவைக் கணக்கிட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து எந்த திசையில் அதிக வாகனங்களை அனுப்ப வேண்டும் என கட்டளையிட்டு தானியங்கி முறையில் சிக்னலை இயக்கும். இரு வழிகளில் வரும் வாகனங்கள் ஒரு சாலையில் ஒன்றுசேரும் பகுதியில் வாகனங்கள் மோதும் நிலை ஏற்பட்டால், அது தொடர்பாக தானாகவே போக்குவரத்து காவலருக்கு தகவல் தெரிவிக்கும்.

அபராதம் விதிக்கப்படும்

போக்குவரத்து போலீஸாரால் குறிப்பிட்ட சிக்னலில் மட்டும்தான் கண்காணித்து மேலாண்மை செய்ய முடியும். ஆனால் இத்திட்டம் மூலம் 3 சிக்னல்களுக்கு அப்பால் உள்ள போக்குவரத்து நெரிசலையும் அறிந்து, அதற்கேற்ப சிக்னலை இயக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கும். 50 இடங்களில் சிவப்பு விளக்கு விதிமீறல்கள், 10 இடங்களில் வேக விதிமீறலைக் கண்டறிந்து, மத்திய அரசு இணையதளம் மூலம் அபராதம் விதிக்கப்படும்.

மாநகர போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து அதன் 3 ஆயிரத்து 500 பேருந்துகளில் கண்காணிப்பு கருவிகள் பொருத்தி, 71 பேருந்து முனையங்கள், 532 பேருந்து நிறுத்தங்களில், பேருந்து வருகை, புறப்பாடு குறித்த தகவல் தெரிவிக்கும் பலகை மற்றும் அறிவிப்பு ஒலிபெருக்கி வைக்கப்படும்.

பணிமனை மேலாண்மையும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு, இருப்பில் உள்ள பேருந்துகள், இயக்கப்படுபவை, ஓட்டுநர்கள் விவரங்களை ஆன்லைனில் பார்க்க முடியும். ஒருசில பகுதிகளில் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்லும். பிறகு ஒரு மணி நேரத்துக்கு பேருந்தே அந்த சாலையில் வராது. இத்திட்டம் மூலம் அவற்றை முறைப்படுத்தி போதிய இடைவெளியில் பேருந்துகளை இயக்க முடியும்.

இத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சென்னையில் தடையில்லா போக்குவரத்து சாத்தியமாகும். அதன்மூலம் எரிபொருள் சிக்கனமாவதுடன், காற்று மாசுபடுவதும் குறையும். போக்குவரத்து விதிமீறல்கள் குறையும்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்து விடும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்