சென்னை: தொழிலாளர் நலத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது: தமிழகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங்களில் பயின்று வந்த குழந்தைகள், தற்போது முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு, இலவச சீருடை, பாடப் புத்தகங்கள், புத்தகப் பை,விளக்கப் படங்கள், பூலோக வரைபடங்கள், கணித உபகரணப் பெட்டி, வண்ணபென்சில்கள், காலணிகள், இலவசப் பேருந்து பயண அட்டை, வாரம் 5 முட்டையுடன் கூடிய மதிய உணவு ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா காலத்தில் இவர்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. பல காரணங்களால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். இது தொடர்பாக பெற்றோர் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டதுடன், விழிப்புணர்வுப் பேரணி, வீதி நாடகம் போன்றவை நடத்தப்பட்டன.
குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதலில் சிறப்பாகப் பணிபுரிந்த கள அலுவலர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ எம்.கே.மோகன், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், துறைச் செயலர் ஆர்.கிர்லோஷ்குமார், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, பொதுத் துறைச் செயலர் டி.ஜகந்நாதன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் தலைமையில், அந்தந்த துறை அலுவலர்கள் தலைமைச் செயலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திலும் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago