தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர வேண்டும்: அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, தமாகா கட்சிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர வேண்டும் என்று அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, தமாகா கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக ஆட்சியில் 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் ஏழை, நடுத்தர மக்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல், அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர்.

ஆனால், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வருவதன் தொடர்ச்சியாக, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளையும் நடப்பு கல்வியாண்டு முதல் மூட அரசு முடிவெடுத்துள்ளது.

கல்வியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை புகுத்துவது ஏற்புடையதல்ல. இதன் மூலம், தனியார் பள்ளிகளின் வருவாயைப் பெருக்க அரசே வழிவகை செய்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, முன்புபோலவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா தொற்றுபரவல் காரணமாக நாடு முடங்கியதால், பெரும்பாலான மக்கள் வேலை, வருமானத்தை இழந்தனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை தயக்கமின்றி சேர்க்க, அங்கு செயல்பட்டு வந்த மழலையர் வகுப்பும், ஆங்கிலவழி போதனையும் பெரும்ஊக்கம் அளித்தன. எனவே, மழலையர் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவதுடன், ஆரம்பப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்களை ஈர்க்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: குழந்தைகளின் கற்றல் திறன் 3 வயதில் சிறப்பாக இருக்கும் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், அப்பருவத்தில் குழந்தைகளுக்கு முறைசார்ந்த கல்வி வழங்குவது அவசியம்.

இதை உணராமல், மழலையர் வகுப்புகளை மூடினால், அது ஏழை மக்களும், தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கே வழிவகுக்கும். எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடரவும், அதற்காக போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை இந்த கல்வியாண்டு முதல் நீக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழை, நடுத்தரக் குடும்பத்தினர்தான். எனவே, இவர்களது பொருளாதார நிலையை மனதில்கொண்டு, மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழலையர் பள்ளிகளை மூடும் அரசின் முடிவைப் பரிசீலிக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்