ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை உடனடியாக விடுவித்திடுக: இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10 கோடி ஹஜ் மானியத்தையும், கொச்சி வழியாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் கூடுதலாக வழங்க வேண்டிய 1,500 ரூபாயையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த மானியம் 2018-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட நிலையில், இஸ்லாமிய சமூகத்தினைச் சேர்ந்த பெரியவர்கள், ஜமாத்தார்கள், ஹஜ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் என்னை நேரில் சந்தித்து தொடர்ந்து ஹஜ் யாத்ரிகர்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளித்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அம்மாவின் அரசு 2018-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு 6 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 3,769 இஸ்லாமியர்களுக்கு தலா 15,913 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

2019-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட 4,379 ஹஜ் யாத்ரிகர்களுக்கு தலா 13,639 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு கரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

பிறகு 2021-ம் ஆண்டு இஸ்லாமிய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 16.2.2021 அன்று அதிமுக அரசு ஹஜ் மானியத்தை 6 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கி ஆணை வெளியிட்டது.ஆனால், எதிர்பாராதவிதமாக 2021-ம் ஆண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பின் காரணமாக சவுதி அரேபியா அரசு ஹஜ் யாத்திரைக்கு தடை விதித்தது.

2022-ம் ஆண்டு, தமிழகத்திலிருந்து சுமார் 3000-க்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். இந்த முறை சவுதி அரேபியா ஹஜ் யாத்ரிகர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டதால், தமிழகத்திற்கு 2019-ம் ஆண்டை ஒப்பீடு செய்யும்போது, சுமார் 40 சதவீதம் அதாவது சுமார் 1,750 நபர்களுக்கு மட்டுமே புனிதப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், இதுவே கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் மத்திய அரசிடம் போராடி தங்கள் மாநிலங்களிலிருந்து ஹஜ் யாத்திரை செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை 50 முதல் 60 சதவீதம் வரை தக்கவைத்துள்ளது. இந்த திமுக அரசு எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை.

இதுபோலவே, தமிழக யாத்ரிகர்கள் கொச்சி விமான நிலையத்தில் இருந்துதான் ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியவுடன், மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து அவர்கள் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி விமான நிலையங்களிலிருந்து புறப்பட அனுமதி பெறவில்லை.

மேலும் அதிமு அரசு அறிவித்த ரூ.10 கோடி ஹஜ் மானியம் மற்றும் கொச்சி விமான நிலையத்தில் தங்குவதற்கும், உணவுக்கும் வழங்குவதாக இந்த அரசு அறிவித்த ரூ.1,500 க்கான (ஒவ்வொரு பயணிக்கும்) கூடுதல் தொகை ஆகியவற்றிற்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை.எப்போதும் சிறுபான்மையினரின் நண்பன் என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் இதுபோன்ற பல்வேறு ஏமாற்றங்களை தமிழக இஸ்லாமியப் பெருமக்களுக்கு அளித்துள்ளது.

ஆனால், உண்மையிலேயே சிறுபான்மையினரின் உண்மையான நலம் விரும்பியாக, பாதுகாவலனாக விளங்கும் ஒரே கட்சி அதிமுகதான் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதிமுக அரசும் அவ்வாறே செயல்பட்டு வந்தது.

> இந்தியாவிலேயே வருடந்தோறும் சொந்த நிதியில் ரமலான் இறை வணக்கம் மற்றும் நோன்பு திறப்பு விருந்து அளித்த ஒரே கட்சி அதிமுக.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அவரது தொண்டர்களாகிய நாங்களும் இதனை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

> புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசின் சார்பில் அரிசி வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

> நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

> பருவ மழையில் பாதிப்படைந்த நாகூர் தர்காவின் குளக்கரை, சுற்றுச்சுவர் சீரமைப்பதற்கு உடனடியாக 4 கோடியே 25 லட்சம் ரூபாயை ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.

> இஸ்லாமிய வகுப்பினருக்கு நேரடி நியமனம் முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீட்டிக்க அரசாணை வெளியிடப்பட்டது.

> மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் நிருவாக மானியம் 50 லட்சமாக உயர்த்தப்பட்டது.

> உலாமாக்கள் ஓய்வூதியம் - பயனாளிகள் எண்ணிக்கை உலாமாக்கள் ஓய்வூதியம் 2,400-லிருந்து 2,600 ஆக உயர்த்தப்பட்டு, ஓய்வூதியம் ரூ.3,000-ஆக உயர்த்தப்பட்டது.

> பள்ளிவாசல்கள், தர்க்காக்கள் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தொகுப்பு நிதி 3 கோடி ரூபாயை ஒதுக்கியது.

> உலாமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000 அல்லது 50 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கியது.

> ஹஜ் பயணிகள் சென்னையில் தங்கிச் செல்ல வசதியாக 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்லாவரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் ஹஜ் இல்லம் புதிதாக கட்ட அரசாணை வெளியிடப்பட்டது.

> முதன்முதலில் இஸ்லாமிய மதத்தைச் யாஸ்மின் அகமது தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக
நியமிக்கப்பட்டார்.

> அதிமுக ஆட்சி புரியும் காலங்களில் தமிழகத்தில் ஜாதிச் சண்டைகள், மதச் சண்டைகள் நடைபெற்றதில்லை, தூண்டிவிடப்படுவதுமில்லை.

> நான் முதல்வராக இருந்தபொழுது அனைத்து மக்களும், குறிப்பாக கிறித்தவ, இஸ்லாமிய சகோதரர்கள் என்னை எப்போது வேண்டுமென்றாலும் அலுவலகத்திலோ, இல்லத்திலோ நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கூறமுடியும். உடனடியாக அக்குறைகள் களையப்பட்டன.

இப்படி நாங்கள் செய்த பல நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையான மதச்சார்பற்ற இயக்கமாக, சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக எப்போதும் திகழ்ந்து வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10 கோடி ஹஜ் மானியத்தையும், கொச்சி வழியாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் கூடுதலாக வழங்க வேண்டிய ரூ.1,500-ம் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், ஹஜ் பயணிகள் எண்ணிக்கையையும், சென்னை விமான நிலையம் வழியாக அவர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள மத்திய அரசிற்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்