அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை முன்பு இருந்ததைப் போலவே நடத்த வேண்டும்: ஒபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் முன்பு இருந்ததைப் போலவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்தது, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது, தாய்மார்களுக்கு கொடுக்கப்பட்ட அம்மா பரிசுப் பெட்டகத்தை ரத்து செய்தது, அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தை முடக்கியது என்ற வரிசையில் தற்போது அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடப்பு கல்வியாண்டு முதல் மூட அரசு முடிவெடுத்துள்ளதாக பத்திரிகைகளில் வெளி வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்' என்ற பழமொழி தான் என் நினைவிற்கு வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை அதிகளவில் ஈர்க்கும் வண்ண ம், தனியார் கல்லூரிகளுக்கு இணையாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2,381 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன்மூலம், ஏழை, எளிய மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்காமல் அரசுப் பள்ளிகளில் சேர்த்தனர். இந்த நடவடிக்கையின் காரணமாக, பெற்றோர்களின் நிதிச் சுமை பெருமளவு குறைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், பல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, வாக்குறுதிகளை நிறைவேற்றாததோடு, நடைமுறையில் மக்களுக்கு பயன் அளித்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களை படிப்படியாக நிறுத்திக் கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் நடந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில், இந்த ஆண்டிற்கு ஒன்றாம் வகுப்பு முதல் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டுமென்று தொடக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டதாகவும், இது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதற்கான முயற்சி என்றும், அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மீண்டும் துவக்கப்பட வேண்டுமென பெற்றோர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்கின்றனர் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

அதே சமயத்தில், "எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இருந்த வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கன்வாடியில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், இங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கான பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்படுவர்" என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

அப்படியென்றால், எல்கேஜி, மற்றும் யுகேஜி மாணவ, மாணவியருக்கு எந்த ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள் என்பதற்கு விடை இல்லை. அமைச்சரின் பதில் ஒரு குழப்பமான நிலையை உருவாக்கி உள்ளது. அமைச்சரின் பதில் 'இருக்கும், ஆனால் இருக்காது' என்பதுபோல் உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கிறதா என்று புரியவில்லை. கல்வியில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை புகுத்துவது ஏற்புடையதல்ல. இதன்மூலம் அரசுப் பள்ளிகளுக்கு சென்றிருந்த குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிவகுத்து இருப்பதோடு, தனியார் பள்ளிகளின் வருவாயைப் பெருக்கவும் வழிவகை செய்து இருக்கிறது.

அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, தன்னலம் தலைவிரித்து ஆடுகிறதோ என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. இது ஏழை, எளிய குழந்தைகளின் கல்வியை பறிக்கும் செயல் என்பது மட்டுமல்லாமல் சமூக நீதிக்கும் எதிரான செயல். சமூக நீதிக்கு எதிராக செயல்படுவதைத்தான் 'திராவிட மாடல்' என்று திமுக சொல்கிறது போலும்! தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை குறையும் நிலை உருவாகும் என்றும், இது ஒரு சங்கிலித் தொடர்போல் மேல்நிலை வகுப்பு வரை செல்லும் நிலை உருவாகும் என்றும், இது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வழிவகுக்கும் என்றும், தனியார்மயத்திற்கு வித்திடும் செயல் என்றும் பொதுமக்களும், கல்வியாளர்களும் கருதுகிறார்கள். இது கல்வியை வியாபாரமாக ஆக்குவதற்குச் சமம். இதனை அரசு ஊக்குவிக்க நினைப்பது என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிரான நியாயமற்ற செயல்.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, முன்பு இருந்ததைப் போலவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்