சென்னை: “மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடாது; இதற்காக, தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மேகதாது அணை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அது குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விவாதிப்பது ஒருதலைபட்சமானதும், தமிழகத்திற்கு துரோகம் செய்வதுமாகும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும்; அதைக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த பல பத்தாண்டுகளாக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 70 டிஎம்சி-க்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட அணையை மேகதாதுவில் ரூ.9,000 கோடியில் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்துள்ள கர்நாடக அரசு, அதை மத்திய நீர்வள அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. காவிரி ஆற்றின் கடைமடை பாசன மாநிலமாக தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றில் கர்நாடக அரசு எந்த அணையையும் கட்ட முடியாது.
இதை பாமக மக்களவை உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் 09.06.2015 அன்று எழுதிய கடிதத்தில் அப்போதைய நீர்வள அமைச்சர் உமாபாரதி ஒப்புக்கொண்டு உறுதி செய்துள்ளார். தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்டமுடியாது என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், மேகதாது அணைக்கு கொல்லைப்புறம் வழியாக அனுமதி பெறும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டுள்ளது. அதற்கு மத்திய அரசின் மறைமுக ஆதரவும் இருப்பதாகவே தோன்றுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட வினா ஒன்றுக்கு விடையளித்த மத்திய நீர்வள அமைச்சகம், மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கைக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்தால், அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து நீர்வள அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு பரிசீலிக்கலாம் என்று அறிவித்தது.
அடுத்த சில வாரங்களில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று சட்ட அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. இவை அனைத்துமே கர்நாடகத்திற்கு ஆதரவாக சிறப்பாக எழுதப்பட்ட நாடகத்தின் திரைக்கதையாகவே தோன்றுகின்றன. 2019ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை குறித்த விவாதம் தொடர்ந்து இடம் பெற்று வந்தது.
தமிழகத்தை சேர்ந்த பாமக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பாலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாலும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் திடீரென மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தை பெற்று வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப் போவதாக அறிவித்திருப்பது இயல்பானதாக தோன்றவில்லை. இதன் பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளது. மேகதாது அணை குறித்து விவாதிக்கவோ, அதற்கு ஒப்புதல் அளிக்கவோ காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதே, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்காகத் தான்.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணைகளை கட்டக்கூடாது என்பது தான் நடுவர் மன்றத் தீர்ப்பு எனும் போது, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை குறித்து காவிரி ஆணையம் எவ்வாறு விவாதிக்க முடியும்?
மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதற்கு அடிப்படை காரணமாக இருப்பது, 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசு அளித்த அனுமதிதான். அவ்வாறு அனுமதி அளிக்கப் பட்டது தவறு என்று கூறித்தான் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மத்திய அரசு அளித்த அனுமதியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி ஆணையம் எவ்வாறு விவாதிக்க முடியும்?
எந்த வகையில் பார்த்தாலும் அதிகாரம் இல்லாத நிலையில், மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்படக் கூடாது. வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இருந்து மேகதாது விவகாரம் நீக்கப்பட வேண்டும். இதற்காக, தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். அதேபோல், மத்திய அரசும் மேகதாது வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago