நீலகிரி மாவட்டத்தில் பொதுத் தொகுதியாக இருந்த கூடலூர் சட்டப்பேரவை தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
இங்கு விவசாயமே பிரதான தொழில். தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல், ஏலக்காய் என பொன் விளையும் பூமியாக கருதப்படுகிறது.
கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் உள்ள இந்த சட்டப்பேரவை தொகுதியில் தாயகம் திரும்பியோர், பழங்குடியினர் மற்றும் இதர மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள பிரதான பிரச்சினைகள் செக்ஷன் 17 நிலப் பிரச்சினை, தனியார் காடுகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் மனித விலங்கு மோதல்கள்.
இப் பகுதியில் 35 ஆயிரம் ஏக்கர் செக்ஷன் 17 நிலங்கள் இது வரை வகைப்படுத்தப்படாததால், வனப் பகுதி பல பிரிவுகளாக சிதறியுள்ளது. இதனால், யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு நுழைவதால் மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 40 பேர், யானை உள்ளிட்ட விலங்குகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்துகொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தும் இது வரை அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை.
இங்கு பல தனியார் காடுகள் உள்ளதால், இதன் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற்றே இந்த நிலங்களை வாங்கவோ, விற்கவோ வேண்டும் என்ற நிலையுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதியில் மசினகுடி உட்பட பல கிராமங்கள் உள்ளதால், இப் பகுதிகளில் வணிக ரீதியான வளர்ச்சிப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த திராவிடமணியை மீண்டும் திமுக களமிறக்கியுள்ளது. கடந்த முறை அதிமுக அரசு அமைந்ததால், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்கிறார் திராவிடமணி.
அவர் கூறும்போது, ‘எனது சட்டப்பேரவை தொகுதி நிதி முழுவதுமாக தொகுதியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொகுதியின் முக்கியப் பிரச்சினைகளான செக்ஷன் 17 நிலப் பிரச்சினை, தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் குறித்து பல முறை சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன். ஆனால் ஆட்சியாளர்கள் எதையும் நிறைவேற்றவில்லை.
இம்முறை, செக்ஷன் 17 நிலங்களில் உள்ளவர்கள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள இடையூறுகள் நீக்கப்பட்டு, 5 ஏக்கருக்கு மேல் விற்கவோ, வாங்கோ மட்டுமே மாவட்டக் குழு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். மனித விலங்கு மோதலை தவிர்க்க நடவடிக்கை எடுத்து, இழப்பீடு தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும். தோட்டத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி, ஊதிய உயர்வு அளிக்கப்படும்.
அவர்களுக்கு நல வாரியம் அமைத்து வீடுகள் கட்டி தரப்படும். கார்டன் மருத்துவமனை 24 மணி நேரம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவருக்கு கடுமையான போட்டி அளிப்பவர்களில் முதன்மையானவர் கூடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.கலைச்செல்வன்.
டேன்டீ தற்காலிக தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என இவர் உறுதி அளித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும். தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தி, தற்காலிக தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதற்காக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். அனைத்து கிராமங்களுக்கும் போதிய தெருவிளக்குகள், நடைபாதைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். சேரங்கோடு டேன்டீ மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
இதேபோல், கூடலூர் தொகுதியில் செக்ஷன் 17 நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இதில் குடியிருக்கும் மக்கள், விவசாயிகளுக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்யப்படும் என பிரச்சாரத்தில் உறுதியளித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago