‘மதுரையின் நிரந்தர மாவட்டச் செயலாளரே’ - செல்லூர் ராஜூ போஸ்டரால் அதிமுகவில் சலசலப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகரில் 22 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச் செயலாளராக நீடிக்கும் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை வாழ்த்தி, அவரது ஆதரவாளர்கள் மாநகரின் 'நிரந்தர மாவட்டச் செயலாளரே' அடைமொழியுடன் ஓட்டிய போஸ்டர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மதுரையில் அதிமுக வட்டாரத்திலிருந்து சிலர் பகிர்ந்தவை: “அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தவரை கட்சியிலும், ஆட்சியிலும் யாரும் நிந்தர அதிகார மையமாக இருக்க முடியாது. கட்சியில் ஜெயலலிதா கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு பணிபுரிந்தவர்கள் சாதாரண நிலையில் இருந்தாலும் அவர்கள் கட்சி, ஆட்சியில் எந்த நிலைக்கு வரலாம் என்ற நிலை இருந்தது. அதற்கு அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் முதல் கே.பழனிச்சாமி வரை ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

அதனாலே, எந்த நேரத்திலும் கட்சியில் செல்வாக்கு பெறலாம், பதவிகள் தேடி வரலாம் என்பதால் சாதாரண கட்சித்தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை போட்டிப்போட்டு கட்சிப் பணியாற்றுவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதுபோலவே அவ்வப்போது திடீரென்று அதிகார மையமாக இருப்பவர்களுடைய பதவி பறிக்கப்பட்டு சாதாரண நிர்வாகிக்கு வழங்கப்படும். இப்படிதான் கட்சிப் பதவிகளில் தொடங்கி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மேயர் பதவிகளை நிர்வாகிகளுக்கு வழங்கி ஜெயலலிதா அழகு பார்த்தார்.

எனவேதான், அரசியலில் சாதிக்க துடிப்பவர்கள், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அதற்கு வசதியாகவே ஜெயலலிதா இளைஞர், இளம்பெண்கள் பாசறை தொடங்கி வைத்தார். அந்த அமைப்பின் தற்போது இருக்கிறதா? இல்லையா? என்று சொல்கிற அளவிற்கு அதன் செயல்பாடு இருக்கிறது.

தற்போது அதிமுகவில் மாவட்டங்கள் தொடங்கி மாநிலம் வரை ஒரே நபர் பல பதவிகளை பெற்றுள்ளனர். மதுரையில் ஜெ., பேரவை மாநில செயலாளராக இருக்கும் ஆர்.உதயகுமார்தான் தற்போது மதுரை மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்துபோது அமைச்சராகவும் இருந்தார். திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார். தற்போது மகளையும் மெல்ல மெல்ல அரசியலில் தலைகாட்ட வைத்து வருகிறார்.

முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாகவும், புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவரது எம்எல்ஏவாக இருந்தபோது இவரது மகன் ராஜ் சத்தியனுக்கு மதுரை மக்களவைத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிமுகவில் ஏற்பட்ட கோஷ்டி பூசலில் அவர் தோல்வியடைந்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மாநகர மாவட்டச் செயலாளராகவும், எம்எல்ஏவாகவும் உள்ளார். முன்பு ஆட்சியில் இருந்தபோது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இந்த மூவரையும் மீறி மாவட்ட அதிமுகவில் யாரும் வளர முடியவில்லை.

இதில், செல்லூர் கே.ராஜூ மாநகர மாவட்டச் செயலாளளராக 22 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாக அவரே கடந்த வாரம் நடந்த மாநகர மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பெருமிதமாக கூறிக்கொண்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர்கள் மூவரும் மதுரை மாவட்ட அதிமுகவின் நிரந்தர அதிகார மையங்களாக உருவாகிவிட்டனர்.”

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை வாழ்த்தி, அவரது ஆதரவாளர்கள் மதுரை மாநகரின் 'நிரந்தர மாவட்டச் செயலாளராரே' அடைமொழி கொடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

“அந்த போஸ்டர், மாநகர கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் மிக பிரமாண்டமாக வைத்துள்ளனர். கட்சியில் வெளிப்படையாகவே இப்படி தனிமனித அதிகார துதி பாடி ஒட்டிய போஸ்டரை அப்புறப்படுத்த செல்லூர் ராஜூ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவரே அதை ரசிக்கிறாரா என்ற தோன்றுகிறது” என்கின்றனர் அதிமுகவில் ஒரு தரப்பினர்.

“கட்சித் தலைமையும் கண்டிக்கவில்லை. ஜெயலலிதா இருக்கும்போது இந்த மாதியான நிரந்தர அதிகாரமையத் தோரணையான போஸ்டர்கள், வாழ்த்துகள் மறந்தும் கூட வைக்க மாட்டார்கள். ஆனால், தற்போது அவரவர் மாவட்டத்திற்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் குறுநில மன்னர்கள்போல் அதிகாரம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்” என்று கட்சி நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

“மதுரை மாவட்டத்தில் மும்மூர்த்திகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் கட்சியில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக காத்திருக்கும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான், மதுரை மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தல், அதற்கு முந்தைய மக்களவைத் தேர்தலில் தேர்தல் களப்பணியில் முன்பிருந்த தேர்தல் களப்பணி அதிமுக நிர்வாகிகள் மத்தியில் இல்லை. பலர் தற்போது பாஜக, திமுக பக்கம் செல்ல ஆரம்பித்துள்ளனர்” என்கின்றனர் அவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்