புதுச்சேரி - அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வுக்கு நடவடிக்கை: மத்திய அரசு உறுதி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி அரிக்கமேடு தொல்லியல் தளங்களை மீண்டும் அகழாய்வு செய்து மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய வெளியுறவு மற்றும் கலாசாரத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு வருகை தந்த அவர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, பொது மக்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் அவர் இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால், ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல ஆண்டுகள் எட்டாத திட்டங்கள் தற்போது மக்களிடம் சென்றுள்ளது. தற்போது பல கோடி மக்கள் வங்கிகளை பயன்படுத்துகின்றனர். இலவச உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. வங்கி கடன், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக வங்கிக் கணக்குகள் மூலம் சென்றடைகின்றன. இதனால், முறைகேடுகள் தடுக்கப்படுகிறது. அரசின் மானியம் நேரடியாக மக்களிடம் செல்கிறது.

கரோனா நோயைக் கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே தரமான தடுப்பூசிகள் தயாரித்து, 130 கோடி மக்களுக்கும் செலுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டன. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சுகாதார மையங்கள் இணைக்கப்பட்டன. புதிய செயலிகள் மூலம் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு செய்யப்பட்டது. தடுப்பூசி புள்ளி விவரங்கள் உடனுக்குடன் சேகரிக்கப்பட்டு, வேகப்படுத்தப்பட்டன. பெரும்பாலான கிராமப் பஞ்சாயத்துக்கள் டிஜிட்டல் மையமாகி உள்ளன. இதன் மூலம் கல்வி, சுகாதாரத் திட்டங்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீடு, வங்கி கடன், ஓய்வூதிய திட்டம், போன்ற பல சேவைகள் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன.

இந்தியா கரோனா தடுப்பில் உலகளவில் சிறப்பான சேவையாற்றி, மக்களை பாதுகாத்துள்ளது. உக்ரேன் போரின்போது, அங்கு தவித்த 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் விரைவாக மீட்கப்பட்டனர். தூய்மை இந்தியா திட்டத்தில் 20 கோடிக்கும் அதிகமான கழிப்பிடங்கள் வரை கட்டப்பட்டுள்ளன.

இந்திய அளவில் சிறந்த மருத்துவ காப்பீடு திட்டம், அங்கன்வாடி மையங்கள் மேம்பாடு, இலவச சிலிண்டர் போன்ற முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாட்டின் 75வது ஆண்டு சுதந்தி தினத்தை கொண்டாடும் நேரத்தில் நாட்டின் வளர்ச்சியைக் கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும். கரோனாவுக்குப் பிறகு நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. நாட்டில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) பணியை நாம் போற்றுகிறோம். வெளிப்படைத் தன்மையற்ற, சட்டவிதிகளை மீறிய சில தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புதுச்சேரி அரிக்கமேடு தொல்லியல் தளங்களை மீண்டும் அகழாய்வு செய்து மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அரிக்கமேடானது, நாட்டின் தொல்பொருள் முக்கியத்தும் வாய்ந்த பகுதியாக உள்ளது. புராதான தளமான பகுதி நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டது வேதனையளிக்கிறது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இங்கு தொடங்கிய அகழ்வராய்சிப் பணி, பிறகு வந்த அரசால் தொடரப்படாமல், பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்திய தொல்லியல் துறை அங்கு மேம்பாட்டுப் பணிகளை தொடங்கும் முன்பு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

புதுச்சேரி நகரம் பாரம்பரிய, வரலாற்றுப்பூர்வமான சுற்றுலாப்பகுதியாக உள்ளதால், அதனை தூய்மையாக பராமரிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். அனைவருமே தூய்மைப் பணியை கடைபிடிக்க வேண்டும்’’ என்று பேட்டியின்போது புதுச்சேரி மாநில அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், எம்பி செல்வகணபதி, எம்எல்ஏ சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்