சென்னை: மக்கள் நம் மீது வைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். திட்ட செயல்பாடுகளில் கள ஆய்வும், மக்களின் கருத்தை அறிதலும் மிக முக்கியம் என்று துறை செயலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு துறைகளின்கீழ் அரசு வெளியிட்ட அறிவிப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்து துறை செயலாளர்களுடனான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் நாள் ஆய்வுக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர் உதயச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் இறுதியில் முதல்வர் பேசியதாவது:
அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருவது ஆய்வில் தெரியவருகிறது. அதேநேரம், ஒரு சில துறைகளில் குறிப்பிட்ட திட்டங்களின் செயல்பாட்டில் தாமதத்தை சரி செய்து, அவற்றை விரைவுபடுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. அது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
பல மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, மக்கள் நம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருப்பதை பார்க்கிறேன். அதை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும். குறிப்பாக, ஏழை மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந்தவிதமான தொய்வும், தாமதமும் இருக்கக் கூடாது. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், சாலை அமைத்தல், குடிநீர்த் திட்டம் போன்றவற்றை செயல்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும். அனைத்து துறைகளும் முடிந்தவரை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் பணித்தரம் மேம்படுவதுடன், கால விரயம் குறையும்.
பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், அதைவிட நாம் எவ்வளவு சிறப்பாக அவற்றை வழங்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும். அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
திட்ட செயலாக்கம், கண்காணிப்பில் புதிய தொழில்நுட்பங்கள் எந்த அளவு புகுத்தப்படுகிறது என்பதில்தான் மாநிலத்தின் வளர்ச்சி உள்ளது. பல ஆண்டுகளாக செய்வதையே தொடர்வதால் புதிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது.
இந்த அரசின் 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். முதலாம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இன்னும் சிலவற்றுக்கு அரசாணை வெளியிட வேண்டியுள்ளது. அரசாணை வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பாராட்டத்தக்கது. அதேநேரம், பல்வேறு அறிவிப்புகளுக்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். நடப்பாண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அரசாணை வெளியிடப்பட்டவை மீது உரிய நடவடிக்கை எடுத்து மாத இறுதிக்குள் அவற்றை செயல்படுத்த வேண்டும்.
போதிய நிதி ஒதுக்கீட்டுடன் அரசாணைகள் வெளியிட்ட பிறகு, துறைத் தலைவர்கள் எவ்வித தாமதமும் இன்றி, அவற்றை நடைமுறைப்படுத்தி, திட்டங்களின் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதைவிட முக்கியம், கள ஆய்வுகள் மேற்கொள்வதாகும். திட்ட செயலாக்கத்தின்போது தேவையானவற்றில் மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் குடிநீர், சாலை, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு திட்டங்களை தொய்வின்றி சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்.
அரசின் சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள், கட்டிட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள், தடையின்மை சான்றிதழ்கள் போன்றவற்றை தாமதமின்றி வழங்குவதை துறைத் தலைவர்கள் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
எனவே, மிகப்பெரிய உள் கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும், எளிய சேவை திட்டமாக இருந்தாலும் நீங்கள் அனைவரும் ஒரே அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். இது மக்களுக்கான திட்டம், இதை விரைவில், செம்மையாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், துறை அமைச்சர்களுடன் இணைந்து, துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை வழிநடத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
முதல் நாளில் நகராட்சி நிர்வாகம், நீர்வளம், பொதுப்பணி, எரிசக்தி, நெடுஞ்சாலை, வீட்டுவசதி, தொழில், சிறுதொழில், தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, சுற்றுலா, கலாச்சாரம், அறநிலையம், மனிதவள மேம்பாடு, கைத்தறி, வணிகவரி மற்றும் பதிவு, வருவாய், சிறப்பு முயற்சிகள், உள்துறை, போக்குவரத்து, நிதி ஆகிய 19 துறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2-வது நாளான இன்று ஆதிதிராவிடர், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிலாளர் நலன், ஊரக வளரச்சி, சுகாதாரம், சமூக நலன், பொது, முதல்வரின் முகவரி, மாற்றுத்திறனாளிகள் நலன், சுற்றுச்சூழல் மற்றும் வனம், சட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, திட்டம் மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளின் செயலர்கள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago