சென்னை: “மாநிலத்தின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு நீங்கள் திட்ட செயலாக்கங்களிலும், கண்காணிப்புகளிலும் புகுத்துகிறீர்கள் என்பதில்தான் அமைந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக செய்து வருவதையே தொடர்ந்து செய்து வந்தால், புதிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்” என்று அரசுத் துறைச் செயலர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10-ஆவது தளத்தில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இன்று காலை முதல் உங்கள் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த விவரங்களை விரிவாகவும், தெளிவாகவும் தெரிவித்தீர்கள். அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருவதை இந்த ஆய்வின் மூலம் காண முடிந்தது. அதே சமயம், ஒரு சில துறைகளில், சில குறிப்பிட்ட திட்டங்களின் செயல்பாட்டில் தாமதத்தினை சரிசெய்து, அவற்றின் செயல்பாட்டினை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய ஆய்வின் மூலமாக அறிய முடிந்தது. அவை தொடர்பாக நீங்கள் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
நான் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது பார்க்கிறேன்; மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந்தவிதமான தொய்வும், தாமதமும் இன்றி நீங்கள் பணியாற்றிட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
» குட்கா வழக்கு | தலைமறைவானவர் முன் ஜாமீன் பெறும் வரை காத்திருப்பா? - காவல்துறைக்கு நீதிபதி கண்டனம்
உதாரணமாக, நகர்ப்புர வேலைவாய்ப்புத் திட்டம், சாலை அமைத்தல், குடிநீர்த் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் நீங்கள் அதிக அளவில் தனிக் கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்தில் அவற்றை நிறைவேற்றிட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். கூடுமான வரையில், அனைத்துத் துறைகளும் திட்டங்களை நிறைவேற்றும்போது, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைச் செயல்படுத்த வேண்டுமென்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் பணிகளுடைய தரம் மேம்படும்; சிறப்பாக இருக்கும்; கால விரயமும் குறையும். ஒவ்வொரு துறைச் செயலாளரும் இதனை தங்களுடைய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
அதேபோல், திட்டங்களை வகுப்பதிலும், திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அரசு சாராத துறை வல்லுநர்களின் கருத்துகளை, ஆலோசனைகளைப் பெறலாம். பிற மாநிலங்களில், பிற நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும், நம் மக்களுக்கு எவ்வாறு சிறப்பாக அவற்றை வழங்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும். Best Practices எங்கு இருந்தாலும், அதனை நாம் நமக்கேற்ற வகையில் பின்பற்றி, மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன்களை கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.
மாநிலத்தின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு நீங்கள் திட்ட செயலாக்கங்களிலும், கண்காணிப்புகளிலும் புகுத்துகிறீர்கள் என்பதில்தான் அமைந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக செய்து வருவதையே தொடர்ந்து செய்து வந்தால், புதிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.
நாம் தற்போது இந்த அரசின் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். முதல் ஆண்டு முடிந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். முதலாம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இன்னும் சில அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது. ஆணை வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பல அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பாராட்டத்தக்கது. அதேசமயம், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அறிவிப்புகளையும் நாம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல, நடப்பு ஆண்டில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இவற்றில் அரசாணை வெளியிடப்பட்ட இனங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, இம்மாத இறுதிக்குள் தேவையான அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாணை வெளியிடப்பட, துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம் என்பதையும் இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசாணைகளை வெளியிடுவது என்பது, திட்டச் செயலாக்கத்தில் முதல் படி மட்டுமே என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாணைகள் வெளியிடப்பட்ட பின்னர், துறைத் தலைவர்கள் எவ்வித தாமதமும் இன்றி, அவற்றை நடைமுறைப்படுத்தி, மக்களிடம் திட்டங்களின் பயன்களைக் கொண்டுபோய்ச் சேர்த்திட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது.
அதிலும் மிக முக்கியமானது ,"கள அளவில் ஆய்வுகள்" மேற்கொள்வதாகும். தேவையான இனங்களில், திட்ட செயலாக்கத்தின் போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். இவை ஒவ்வொன்றிலும் மாவட்ட ஆட்சியர்களை ஈடுபடச் செய்து, அனைத்து திட்டங்களையும் நீங்கள் நிறைவேற்றிட வேண்டும்.
பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர் மற்றும் சாலைத் திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் போன்றவை எல்லாம் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய திட்டங்கள் ஆகும். அவற்றை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும்.
அதேபோல், அரசின் சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள், கட்டிட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள், தடையின்மைச் சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில், கணினி தொழில்நுட்ப வசதியினைப் பயன்படுத்தி, அவை தாமதமின்றி வழங்கப்படுவதை துறைத் தலைவர்களாகிய நீங்கள் கள அளவில் ஆய்வு செய்து, உறுதி செய்திட வேண்டும். அப்போதுதான் நாம் அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்தி, அரசுத் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சென்றதாகக் கருத முடியும்.
எனவே, மிகப் பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும் சரி; எளிய ஒரு சேவைத் திட்டமாக இருந்தாலும் சரி; நீங்கள் அனைவரும், ஒரே அர்ப்பணிப்பு உணர்வுடன், இது மக்களுக்கான திட்டம்; இதனை விரைவில், செம்மையாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், உங்கள் துறை அமைச்சருடன் இணைந்து, துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை வழிநடத்தி, திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும். அடுத்த ஆய்வுக் கூட்டத்தில், இந்த திட்டங்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற அந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago