சென்னை: “பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது?” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கியிருக்கும் ரூபாய் 85 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றனர்.
ஆனால், கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கள்ளப் பணத்தின் புழக்கம் இருமடங்காக கூடிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. மோடியின் ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை.
ஊழலை ஒழித்துவிட்டதாக பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் பேர ஊழல் நடைபெற்றதை நாட்டு மக்கள் அறிவார்கள். இதில் நரேந்திர மோடியின் நேரடி தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது.
» வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
» தமிழகத்தில் 'தட்கல்' முறையில் பத்திரப்பதிவு: அரசாணை வெளியீடு
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் ரூபாய் 526 கோடி என்ற விலையில், 126 ரபேல் விமானங்களை 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியிலோ 36 ரபேல் விமானங்கள் வாங்க ஒரு விமானத்தின் விலையை ரூபாய் 1670 கோடியாக அதிகரித்து மொத்தம் ரூபாய் 60 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புக்கு யார் காரணம் ? இந்த இழப்பு எதனால் ஏற்பட்டது ? ஒரே ஒரு விமானம் தயாரித்த அனுபவமில்லாத மோடியின் நண்பர் அனில் அம்பானிக்காக இத்தகைய வருவாய் இழப்பு மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.
இது ஊழல் இல்லை என்றால், எது ஊழல் என்பதைப் பிரதமர் மோடி விளக்க வேண்டும். பிரதமர் மோடியின் ஆட்சியில் வறுமை குறித்து ஹின்ட்ரைஸ் பவுன்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையில் 20 கோடி இந்தியர்களுக்கும் மேலாக நாள் தோறும் பசியோடும், வெறும் வயிற்றுடனும் உறங்கச் செல்கிறார்கள் என்று கூறியதோடு, பட்டினியால் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
2020 அக்டோபரில் வெளியிடப்பட்ட உலக வறுமை குறியீட்டு அறிவிப்பின்படி, மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களிடையே வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடுகிற போது குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மடங்கு பலமடங்கு கூடியிருப்பது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் கூற வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகால ஆட்சி குறித்து பாஜகவினர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், மோடியின் ஆட்சிக் காலத்தில் ஏழை, எளியோரின் வாழ்க்கைத்தரம் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிற போது, மோடியின் நெருங்கிய நண்பர்களான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது.
உலக கோடீசுவரர்கள் வரிசையில் 7.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறுகிய காலத்தில் அதிகரித்து, உலக கோடீசுவரர்களின் வரிசையில் பத்தாவது இடத்தில் கௌதம் அதானி இருக்கிறார். ஆசியாவின் முதல் கோடீசுவரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு கௌதம் அதானி முதலிடத்தைப் பெறுவதற்கு யார் காரணம் ? பிரதமர் மோடியின் ஆதரவினால் தான் கௌதம் அதானியின் அசுர வளர்ச்சி ஏற்பட்டது என்பதைப் பகிரங்கமாக குற்றம்சாட்ட விரும்புகிறோம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டிருக்கிறார். 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூறுகிற துணிவு பிரதமர் மோடிக்கு இருக்கிறதா? இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் இவர்கள் மீது ஊழல் வழக்கு இருப்பதாக பாஜகவினரால் கூற முடியுமா ?
சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பொறுத்தவரை அன்று பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி பதவி விலகிய 1989-ம் ஆண்டுக்கு பிறகு, இதுவரை எந்தவிதமான அரசு பொறுப்பையும் ஏற்றதில்லை. பிரதமர் பதவி தம் மீது திணிக்கப்பட்ட போது அரசியல் பேராண்மையோடு மறுத்தவர் சோனியா காந்தி. பதவி மறுப்பாளர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை களங்கப்படுத்துகிற முயற்சிகளில் பிரதமர் மோடியோ, பாஜகவினரோ வெற்றி பெற முடியாது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்கக் கோரி கோட்டையை நோக்கித் திரட்டப்பட்ட கூட்டத்தை வைத்து தமிழக பாஜக பேரணி நடத்தியிருக்கிறது. இவற்றின் விலையை பாஜக அரசு நிர்ணயம் செய்கிறதா? தமிழக அரசு நிர்ணயம் செய்கிறதா? யார் நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்துவாரா?
2014 மே மாதத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 9.48. அது தற்போது ரூபாய் 27.90. டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.56 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 21.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014ல் ரூபாய் 400க இருந்தது, தற்போது ரூபாய் 1015-க விற்கப்படுகிறது. இவையெல்லாம் பாஜக அரசின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.
இந்நிலையில், திமுக அரசு கொடுத்த வாக்குறுதியின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 விலையைக் குறைத்திருக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு ரூபாய் 1016 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையோடு ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு, இந்த விலை குறைப்பைச் செய்திருக்கிறது. இதைப் பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் விமர்சனம் செய்யாமல் இருக்கலாம். ஆனால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது ?
எனவே, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதவாத அரசியல் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பி, அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறாது" என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago