டெல்டா மாவட்டங்களில் 2-வது நாளாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 31) ஆய்வு செய்தார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த மே 24-ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் தமிழக நீர்வளத்துறை சார்பில், சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இந்த ஆய்வின் இரண்டாவது நாளான இன்று நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம், கருவேலங்கடை மற்றும் கல்லார் கிராமம், கல்லார் வடிகாலில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 3.50 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கிய மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

மயிலாடுதுறை: தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்தமங்கலத்தில் நடைபெற்று வரும் விவசாயப் பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விதை நெல்லை தூவி விவசாயப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் அரசு அதிகாரிகள், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE