கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களை நடைமுறைப்படுத்தலாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை நடைமுறைப்படுத்தலாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக கலையரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலை.வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான பொன்முடி முன்னிலை வகித்தார்.

பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 359 பேருக்கு தங்கப் பதக்கம், பிசிஏ படிப்பில் முதலிடம் பிடித்த கோவை மாணவி எம்.நிவேதாவுக்கு ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மைய விருது மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசை ஆளுநர் ரவி வழங்கினார். 22 பேருக்கு பிஎச்.டி., 20 பேருக்கு எம்.பில். பட்டம் வழங்கப்பட்டன.

விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது:

வேகமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம். தொழில்நுட்ப மாற்றம் நிறைய வாய்ப்புகளைத் தந்துள்ளது. மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விர்ச்சுவல் லேப் மூலம் தொலைநிலைக் கல்விக்கு உதவத் தயாராக இருப்பதாக சென்னை ஐஐடி இயக்குநர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. இதர பல்கலைக்கழகங்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

மாறி வரும் சூழலில், கல்வித் துறையில் அடிப்படை மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்வதற்காக புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதை மேலோட்டாகப் படித்துவிட்டு, விமர்சிக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழுமையாகப் படிக்க வேண்டும். இதில் உள்ள நல்ல விஷயங்களை விரைந்து நடைமுறைப்படுத்தலாம்.

2047-ல் சுதந்திர தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் நேரத்தில், உலகின் முன்னணி நாடாக இந்தியா திகழும்.

இவ்வாறு ஆளுநர் கூறினார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘‘பணியில் இருந்துகொண்டே படிப்பை தொடர விரும்புவோருக்கு, தொலைநிலைக் கல்வி வரப் பிரசாதம். தற்போது ஆண்களைவிட, பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள். பெண் கல்வி வளர வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பெரியாரின் விருப்பமும் அதுதான். இந்த விஷயத்தில் ஆளுநரும் இதே கருத்து உடையவர்தான். அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வியை தொடர்ந்து வழங்க யுஜிசி-க்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்றார்.

சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பட்டமளிப்பு விழா உரையாற்றும்போது, ‘‘கரோனா காலத்தில் ஆன்லைன் கல்வி முறை அவசியம் தேவைப்பட்டது. டிஜிட்டல் முறையில் பாடங்களை நடத்துவது எளிது. மெய்நிகர் தொழில்நுட்பம் தொலைநிலைக் கல்வித் திட்டத்துக்கு பெரும் வரப்பிரசாதம். விர்ச்சுவல் ரியாலிட்டி, விர்ச்சுவல் லேப், கிளவுட் டெக்னாலஜி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தொலைநிலைக் கல்விக்கு உதவ, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்ற சென்னை ஐஐடி தயாராக உள்ளது’’ என்றார்.

பல்கலை. துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி வரவேற்றார். உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன், பல்கலை. பதிவாளர் கே.ரத்னகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மணிவண்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்