‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி: பயிற்சியும், முயற்சியும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: பயிற்சியும், முயற்சியும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்று தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்புப் பணி அதிகாரி க.இளம்பகவத் கூறினார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற சிவில் சர்வீஸ் தேர்வு வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாணவ, மாணவிகள் 8 மணியில் இருந்தே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வரத்தொடங்கினர்.

இதில் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்புப் பணி அதிகாரி க.இளம்பகவத் ஐஏஎஸ் பேசியதாவது: நான் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தேன். குடும்பச் சூழல் காரணமாக கல்லூரி சென்று படிக்க முடியவில்லை. அஞ்சல்வழிக் கல்வியில் சேர்ந்து, பி.ஏ. வரலாறு படித்து முடித்தேன்.

முதல்முறையாக சிவில் சர்வீஸ் தேர்வெழு தியபோது, எவ்வித தயாரிப்பும் இல்லாமல்தான் பங்கேற்றேன். `கல்லூரிக்குச் சென்று படிக்கவில்லை. இவன் எல்லாம் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்கிறான்' என்று ஏளனப் பார்வையோடு பார்த்தவர்கள் பலர். எனது 3-வது முயற்சியில் நேர்முகத் தேர்வு வரை சென்றேன். அப்போதுதான் என்மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

பள்ளியில் தமிழ் வழியில் படித்துள்ளோம். ஆங்கிலப் புலமை இல்லை என்ற எண்ணத்தை தகர்த்தால்தான், வெற்றிபெற முடியும். ஒருபோதும் தாழ்வு மனப்பான்மை கூடாது. எப்போது தன்னம்பிக்கை வருகிறதோ, அப் போது பயம் அகலும். பாடத்தை நன்கு படித்தால், தன்னம்பிக்கை தானாகப் பிறக்கும். நமது பார்வை மாறும்.

ஊக்கம் என்பது மற்றவர்களைப் பார்த்து அல்லது புத்தகத்தைப் படித்து அல்லது ஏதேனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியைப் பார்த்து என வெவ்வேறு வழிகளில் கிடைக்கலாம். நம்மிடம் தேடல் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

எனக்கு பள்ளிப் பருவத்தில் இருந்தே நாளிதழ்கள் படிக்கும் வழக்கம் இருந்தது. நாளிதழ் வாசிக்கும் பழக்கம்தான், சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வாயிலைத் திறந்துவிட்டது.

நான் கல்லூரிக்குச் சென்று படிக்கவில்லை என்றாலும், நாளிதழ்கள், புத்தகங்கள் படித்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். நாளிதழ்கள் படிக்கும் பழக்கம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மிகவும் அவசியம். இதன்மூலம் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதுடன், புத்தகங்களில் நாம் படிக்கும் விஷயங்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

பாடப் புத்தகங்களைப் புரிந்து படிக்கும்போது, நமக்கு அந்தப் பாடத்தில் அடிப்படை அறிவு கிடைத்துவிடும். தேர்வில் என்னென்ன தவறுகள் செய்துள்ளோம் என்பதை அடையாளம்கண்டு, அடுத்த தேர்வில் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடியும்.

சிவில் சர்வீஸ் தேர்வு நாம் நினைப்பதுபோல மிகப் பெரிய தேர்வு அல்ல. அதில் தேர்ச்சி பெற்றால் புத்திசாலி; தேர்ச்சி பெறாவிட்டால் புத்திசாலி அல்ல என்பது கிடையாது. பயிற்சியும், முயற்சியும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பொருளாதாரப் பின்புலம் தேவையில்லை

சங்கர் ஐஏஎஸ் அகாடமி மூத்த பயிற்றுநர் சந்துரு பேசும்போது, ‘‘2004-ல் தொடங்கப்பட்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி இதுவரை 1,600-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளையும், 3,000-க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களையும் உருவாக்கியுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு 20 வகையான பணிகளுக்காக நடத்தப்படும் பொதுவான தேர்வு. இதில் வெற்றிபெற குடும்பப் பின்னணியோ, பொருளாதாரப் பின்புலமோ தேவையில்லை. அதேநேரம், படிப்பு மட்டும் போதாது. தலைமைப் பண்பு, எதையும் எதிர்கொள்ளும் தன்மை, நன்னடத்தை போன்ற பண்புகள் அவசியம். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும். ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,000 காலியிடங்கள் அறிவிக்கப்படுகின்றன. ஏறத்தாழ 11 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தாலும், 6 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதுகின்றனர். அதில் உண்மையான போட்டியாளர்கள் சுமார் 70 ஆயிரம் பேர்தான் இருப்பார்கள். எனவே, லட்சக்கணக்கானோர் எழுதுகிறார்களே என்று மலைத்துவிட வேண்டாம்’’ என்றார்.

‘இந்து தமிழ் திசை’ முதன்மை உதவி ஆசிரியர் செல்வ.புவியரசன் பேசும்போது, “தினமும் நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அடிப்படையானது. அந்த நாளிதழ்கள் தரமானதாக இருக்க வேண்டும். வெவ்வேறு துறைகளில் பணியாற்றக்கூடிய வாய்ப்பை ஐஏஎஸ் பணி தரும். திட்டமிட்ட உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் இத்தேர்வில் வெற்றிபெறலாம்” என்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத் திட்டம், தேர்வுக்குத் தயாராகும் முறை, வெவ்வேறு பணிகள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

‘தன்னம்பிக்கை, நேர மேலாண்மை அவசியம்’

மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேசும்போது, “மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் படிக்க வேண்டாம். உண்மையில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மட்டுமே, அந்த தேர்வுக்குத் தயாராகுங்கள். இந்த தேர்வைப் பொறுத்தவரை, வழிகாட்டுதல் மிகவும் முக்கியம். உங்களால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குப் படியுங்கள். பகுத்து ஆராயும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய வாசியுங்கள். ஒருமுகத்திறன், தன்னம்பிக்கை, நேர மேலாண்மை அவசியம்.

ஒரு துறையின் அண்மைக்கால வளர்ச்சி வரை தெரிந்துகொள்ள வேண்டும். நன்கு திட்டமிட்டுப் படிக்க வேண்டும். உங்களிடம் லட்சியக் கனல் எரிந்துகொண்டே இருக்க வேண்டும். பயிற்சியும் முயுற்சியும் இத்தேர்வில் வெற்றிபெறத் தேவையானவை. எதைப் படித்தாலும் ஆர்வத்துடனும், அறிவுத் தாகத்துடனும் படியுங்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 secs ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்