ஓசூரில் தற்காலிக மொத்த காய்கறிகள் விற்பனை சந்தையால் போக்குவரத்து நெரிசல், திருட்டு, சுகாதார சீர்கேடு

By செய்திப்பிரிவு

ஓசூரில் தற்காலிகமாக செயல் படும் மொத்த காய்கறிகள் விற்பனை சந்தையால், போக்குவரத்து நெரிசல், திருட்டு உள்ளிட்டவையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதியுற்று வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் மையப் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இது தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய சந்தை ஆகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா பரவலை தடுக்கும் வகையில், ஒசூர் உழவர் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.

அப்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட 4 இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டன.

கரோனா பரவல் குறைந்ததால், ஓசூர் உழவர் சந்தை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டில் முக்கால் செண்ட் அருகே 100 அடி சாலையில் அமைக்கப்பட்ட தற்காலிக மொத்த காய்கறிகள் விற்பனை சந்தை தற்போதும் அங்கேயே செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

திருட்டு, வழிப்பறி

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தற்காலிக மொத்த காய்கறிகள் விற்பனைச் சந்தை இரவு 11 மணிக்கு தொடங்கி காலை 8 மணி வரை செயல்படுகிறது. இதனால் தினமும் 250-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள், லாரி உள்ளிட்டவை வந்து செல்கின்றன.

வாகனங்களை சாலையில் நிறுத்திவிடுகின்றனர். இதனால், இப்பகுதியில் வசிப்பவர்கள் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக கார், இரு சக்கர வாகனங்களில் அவ்வழியே செல்ல முடியாத நிலை உள்ளது.

இதேபோல் பூட்டிய வீடுகளில் திருட்டு, தனியாகச் செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. ஒரு சிலர் கஞ்சா மற்றும் மது அருந்திவிட்டு சுற்றித் திரிவதால், பெண்கள் வெளியே அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், அழுகும் காய்கறிகள், தேவைற்ற குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாமல், இங்கேயே சாலையோரமும், பேருந்து நிறுத்தங்களில் வீசிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல், திருட்டு சம்பவங்களும், சுகாதார சீர்கேடு உள்ளிட்டவையால் எங்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் உழவர் சந்தைக்கே சென்று காய்கறிகள் வாங்கிக் கொள்கிறோம். எங்களின் நலன் கருதி, இங்கு செயல்படும் தற்காலிக மொத்த காய்கறிகள் விற்பனை சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE