சென்னை: "தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியிலே படித்தவன், பேரறிஞரின் காஞ்சிக் கல்லூரியிலே பயின்றவன் என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையில் அமைந்திருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை - ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: "வாழ்விலோர் பொன்னாள்" என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டை, இந்தத் தமிழினத்தை, இந்தத் தமிழ்நிலத்தை வானுயரத்துக்கு உயர்த்திய தலைவர் கருணாநிதிக்கு நம்முடைய நன்றியின் அடையாளமாக "தமிழினத் தலைவரின்" இந்த மாபெரும் சிலை எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிலையை உயர்த்தப் பாடுபட்டவர் என்பதால்தான் தலைவர் கருணாநிதிக்கு தமிழ்நாடு முழுவதும் சிலை எழுப்பப்பட்டு வருகிறது. இன்று எழுப்பப்பட்டு இருக்கக்கூடிய சிலைக்கு இருக்கக்கூடிய சிறப்பு என்னவென்று கேட்டால், தந்தை பெரியாருக்கும், பேரறிஞர் அண்ணாவுக்கும் இடையில் தலைவர் கருணாநிதியின் சிலை அமைந்திருக்கிறது. இது மிக மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது!
தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பள்ளியிலே படித்தவன், பேரறிஞரின் காஞ்சிக் கல்லூரியிலே பயின்றவன் என்று தன்னைப் பற்றி அவர் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதற்கு ஏற்பவே பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையில் கருணாநிதியின் சிலை அமைந்திருக்கிறது.
இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டால், கருணாநிதியால் இந்த ஓமந்தூரார் தோட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த மாபெரும் கட்டடம். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்காக கட்டப்பட்ட கட்டடம் இது. தற்போது மருத்துவமனையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அது கம்பீரமாக கருணாநிதியின் கனவுக் கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. அங்குதான் அவரது சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. சிலையைத் திறந்து வைத்திருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி, இந்த விழா நடக்கக் கூடிய இடம் கலைவாணர் அரங்கமானது, ஒருகாலத்தில் ‘பாலர் அரங்கம்’என்று இருந்தது. அதனை மிகப் பிரமாண்டமாக கட்டி எழுப்பிக் கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டியவரும் கருணாநிதி தான்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட விழாவுக்கு மகுடம் வைப்பதைப்போல, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு வருகை தந்து சிலையைத் திறந்து வைத்திருக்கிறார். நம்முடைய நட்புக்குரிய இனிய நண்பராகத்தான் குடியரசுத் துணைத் தலைவர் எப்போதும் இருந்து வருகிறார். துரைமுருகன் குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, 2001-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி மிகக் கொடூரமான முறையில், அன்றைய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட போது, அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனும் பிரதமராக இருந்த வாஜ்பாயும் துடிதுடித்துப் போனார்கள்.
அப்போது, அன்றைய ஆட்சியாளர்களைக் கடுமையாகக் கண்டித்து, கடுமையாக விமர்சித்தவர்தான் இங்கே வந்திருக்கக்கூடிய வெங்கைய்ய நாயுடு.அதே நட்பை இன்று வரையில் பேணிவரக் கூடியவராக தொடர்ந்து இருக்கிறார்.
கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என்று சிந்தித்த நேரத்தில், குடியரசுத் துணைத் தலைவர் முகம்தான் எங்களுடைய நெஞ்சில் தோன்றியது. அவரை நேரில் சந்தித்துக் கேட்ட நேரத்தில், மனபூர்வமாக ஒப்புக் கொண்டார். குடியரசுத் துணைத் தலைவர் மிகச் சிறந்த ‘நாடாளுமன்ற ஜனநாயகவாதி’ என்று பெயர் எடுத்தவர். மாநிலங்களவையை கொந்தளிப்பான சூழலிலும் திறம்படக் கையாண்டவர்.
எனவேதான், கருணாநிதி சட்டமன்றத்தில், 60 ஆண்டுகள் பணியாற்றியதற்கு எத்தகைய திறமை வேண்டும் என்பது குடியரசுத் துணைத் தலைவருக்குத் தெரியும். இன்று தலைவர் கருணாநிதியின் சிலையை அவர் திறப்பது மிக, மிக சாலப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இந்திய நாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் என்ற மிக உயர்ந்த பதவியில் இருக்கும்போது, நம்முடைய தமிழினத் தலைவரின் சிலையை திறந்து வைத்திருப்பது இன்னும் பெருமைக்குரிய நிகழ்வாக இது நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். சிலையை குடியரசுத் துணைத் தலைவராகிய நீங்கள் இங்கே வந்து திறந்து வைத்திருக்கிறீர்கள்.
இந்திய நாட்டின் பிரதமர்களை உருவாக்கியவர், இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்கள் பலரை உருவாக்கியவர் இந்திய அளவில் நிலையான ஆட்சியை உருவாக்குவதற்கும் துணை நின்றவர். தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து இந்த நவீன தமிழகத்தை உருவாக்கியவரும் தலைவர் கருணாநிதி. அத்தகைய மாமனிதருக்குத்தான் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஆட்சி அமைத்த நேரத்தில்,"ஏழைக்குலத்தில் உதித்த ஒரு தமிழன் ஏறுகிறான் அரசு கட்டிலில்! இனி ஏழைக்கு வாழ்வு வந்தது" - என்று தலைப்புச் செய்தியாக ‘முரசொலியில்’ தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
அறிஞர் அண்ணா இரண்டு ஆண்டுகள்தான் ஆட்சியில் இருக்க இயற்கை அனுமதித்தது. அதன் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்று, இந்த இயக்கத்தை தனது இறுதி மூச்சுவரை காப்பாற்றியவர் தலைவர் கருணாநிதிதான். நம் தலைவர் பன்முகத் திறமைக் கொண்டவர். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், அந்தத் துறையில் கோலோச்சியவர். இலக்கியமா? எத்தனை! எத்தனை! குறளோவியமும், தொல்காப்பியப் பூங்காவும், பொன்னர் சங்கரும் காலத்தால் அழிக்க முடியாத காப்பியங்கள்!
திரையுலகமா? இன்றும் பராசக்தி, மனோகரா, பூம்புகார் வசனங்கள் நாட்டிலே ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
என்னுடைய பாசமிகு நண்பர் ரஜினிகாந்த் வருகை தந்திருக்கிறார். அவருக்கு நன்கு தெரியும், நன்கு அறிவார். திரையுலகத்துக்குள் வருபவர்கள் கருணாநிதியின் வசனத்தைப் பேசி அதில் தங்களது திறமையை நிரூபித்து, உள்ளே நுழைந்தவர்கள் என்பது தான் வரலாறு.
அரசியலா? ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஏறக்குறைய 50 ஆண்டுகள் அதை வழி நடத்திய ஒரே தலைவர்.
ஆட்சியா?
இன்றைக்கு நாம் காணக்கூடிய நவீனத் தமிழ்நாடு கருணாநிதியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தொலைநோக்குப் பார்வை அவருக்கு இருந்தது. அதற்கான உள்ளார்ந்த அக்கறை அவருக்கு இருந்தது. ஏனென்றால், தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவர் விளங்கினார். அத்தகைய மக்களின் உயர்வுக்காக எழுதினார். அவர்களுக்காகப் பேசினார். அவர்களுக்காகப் போராட்டம் நடத்தினார். அவர்களுக்காகச் சிறையில் இருந்தார். ஆட்சி அதிகாரம் கிடைத்ததும், அவர்களுக்காகத் திட்டங்களைத் தீட்டினார். அந்தத் திட்டங்களால் உருவானதுதான் இந்தத் தமிழ்நாடு.
அதனால்தான் அவரை "நவீனத் தமிழ்நாட்டின் தந்தை" என்று இன்றைக்கும் புகழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர் உருவாக்கிய கல்லூரிகளில் படித்தவர்கள், அவரால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள், அவர் காப்பாற்றிக் கொடுத்த சமூகநீதியால் உயர்வு பெற்றவர்கள், இலவச மின்சாரத் திட்டத்தால் மண்ணைச் செழிக்க வைத்திருக்கக் கூடிய உழவர் பெருமக்கள், சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்களால் வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள், குடிசைமாற்று வாரியத்தால் வீடுகளைப் பெற்றவர்கள், நிலங்களைப் பெற்ற ஏழை எளியவர்கள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் நல்வாழ்வு பெற்றவர்கள், மகளிருக்குச் சொத்துரிமை தரப்பட்டதால் சொத்துகள் பெற்ற மகளிர்கள், சுய உதவிக் குழுக்களால் வாழ்க்கைத் தரம் உயர்ந்த மகளிர்கள், பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் எனத் தாய்த்திருநாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் நலத்திட்டங்கள் மூலமாக கோடிக்கணக்கானவர்களுக்குப் பயனளித்த வான்போற்றும் வள்ளல்தான் தலைவர் கருணாநிதி.
தமிழ்நாட்டின் ஒவ்வொருவரும் அவரால் பயன்பெற்றவராக, அவர் தீட்டிய திட்டங்களால் பயன்பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில், அனைத்து மக்களின் தலைவராக இருந்தவருக்குத் தான் இன்றைய நாள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்ச் சமுதாயத்திற்காக உழைத்த எத்தனையோ பெருமக்களுக்கு சிலைகள், நினைவகங்கள், மணிமண்டபங்கள் அமைத்தவர் தலைவர் கருணாநிதி. அவருக்கு எத்தனை சிலை அமைத்தாலும் ஈடாகாது. அண்ணா சாலையில், பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் இந்தச் சிலை ஈடு இணையில்லாதது.
இதே அண்ணா சாலையில் தந்தை பெரியாரின் விருப்பப்படி, திராவிடர் கழகத்தால் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால், அது சிலரால் கடப்பாரையைக் கொண்டு இடிக்கப்பட்டது. அப்போதும் அவருக்கு கோபம் வரவில்லை, கவிதைதான் வந்தது.
என்ன கவிதை எழுதினார் என்று கேட்டீர்களானால்,
"உடன்பிறப்பே!
செயல்பட விட்டோர்
சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்தச் சின்னத்தம்பி
என் முதுகிலே குத்தவில்லை –
நெஞ்சிலேதான் குத்துகிறான்,
அதனால் நிம்மதி எனக்கு!
வாழ்க வாழ்க!" - என்று எழுதிக் காட்டியிருக்கிறார்.
அதே தலைவர் கருணாநிதி கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றைக்கும் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார். அப்படி வாழப் போகக்கூடிய அவரின் தலைமைத் தொண்டன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ சொல்லக்கூடிய முழக்கம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், வாழ்க! வாழ்க! வாழ்கவே! தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே! நன்றி கூறி விடைபெறுகிறேன்” என்று அவர் பேசினார்.
வாசிக்க > “பிற மொழிகளை மக்களிடம் திணிக்கக் கூடாது” - கருணாநிதி சிலையை திறந்து வைத்த வெங்கய்ய நாயுடு பேச்சு
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago