சென்னை: “ஒரே நாடு, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தி மொழியை திணிப்பதற்காகத்தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூபாய் 31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றியுள்ளார். பிரதமர் தொடங்கி வைத்த 11 திட்டங்களில் 5 திட்டங்களின் பணிகள் நிறைவடைந்திருக்கிறது. மீதமுள்ள ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி இரண்டடுக்கு சாலையின் செயல்திட்ட மதிப்பு ரூபாய் 5852 கோடி செலவில் 21 கி.மீ. நீளமுள்ள சாலை அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறார். இதே திட்டம் ரூபாய் 1655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைத்திட அன்றைய முதல்வர், கருணாநிதி முன்னிலையில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் 8.1.2009 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
மொத்த திட்ட மதிப்பான ரூபாய் 1655 கோடியில் ரூபாய் 700 கோடி செலவு செய்து 30 சதவிகித பணிகள் முடிந்த நிலையில், 2011-இல் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா பொருந்தாத, நியாயமற்ற காரணங்களைக் கூறி திட்டத்தை முடக்கியதை எவரும் மறந்திட இயலாது. இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு தமிழக அரசின் உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து, அதிமுக ஆட்சி ஏற்படுத்திய தடைகளால் திட்டம் நிலுவையில் இருந்தது. அன்று ரூபாய் 1655 கோடியில் நிறைவு பெற வேண்டிய திட்டத்திற்கு நேற்று ரூபாய் 5852 கோடி செலவில் பிரதமர் அடிக்கல் நாட்டியிருக்கிறார். ஏற்கெனவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது மிகுந்த வியப்பையும், வேதனையையும் தருகிறது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்களும், அடிக்கல் நாட்டிய திட்டங்களும் ஏற்கெனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பரிசீலனையில் இருந்து தொடக்க வேலைகள் நடைபெற்று வந்தவையாகும். குறிப்பாக, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் வழித்தடம், மதுரை - தேனி ரயில் வழித்தடம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேலும், சென்னை - பெங்களூர் விரைவு வழிச்சாலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவின் முயற்சியால் இந்த திட்டத்திற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்தெந்த திட்டங்களெல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதோ, அந்த திட்டங்களையெல்லாம் முடக்குகிற நடவடிக்கைள் நடந்து வந்ததை எவரும் மறுக்க முடியாது.
பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து உரையாற்றியது மிகுந்த பாராட்டுக்குரியது. பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு மத்திய அரசின் நிதி ஆதாரங்களுக்கு தமிழகம் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு ஆற்றி வருவதை புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்தார். மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு 6 சதவீதம். ஆனால், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.2 சதவிகிதம் மட்டுமே என்று பிரதமர் மோடியின் முகத்திற்கு நேராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது அவரது அரசியல் பேராண்மையையும், துணிவையும் வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட கடன் சுமையினால், நிதி நெருக்கடிகளுக்கிடையே தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றி வருகிற பணிகளை முதல்வர் பட்டியலிட்டுக் காட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழ் மொழியை பிரபலப்படுத்த கடும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்வதாக பிரதமர் மோடி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானதாகும். மேலும், செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறியிருக்கிறார்.
ஆனால், நடைமுறையில் இந்தி, சமஸ்கிருத மொழிகளுக்கு வழங்கப்படுகிற முன்னுரிமை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கு வழங்கப்படுவதில்லை. கடந்த மூன்றாண்டுகளில், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூபாய் 643.84 கோடி நிதியை மத்திய பாஜக அரசு ஒதுக்கியிருக்கிறது. 2011 மக்கள் தொகையின்படி, 24,821 பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு, மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 22 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதே காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய ஐந்து செம்மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூபாய் 29 கோடி. இத்தகைய அப்பட்டமான பாரபட்சத்தை காட்டிவிட்டு பிரதமர் மோடி பேசும்போது, மகாகவி பாரதியார் பாடலை மேற்கோள் காட்டுவதும், 'வணக்கம்' என்று கூறுவதும் எவ்வளவு கேலிக் கூத்தானது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
பிரதமர் மோடியின் அரசியல் என்பது கூட்டுறவு கூட்டாட்சியை குழிதோண்டி புதைப்பதாகும். மாநில உரிமைகளை பறித்து ஒற்றை ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி என்கிற அடிப்படையில் இந்தி மொழியை திணிப்பதற்காகத் தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டு, இந்தியாவின் அலுவல் மொழியான ஆங்கிலத்தை அகற்றி விட்டு, இந்தியை மட்டுமே நடைமுறைக்கு கொண்டு வருவது தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கூட்டுத் திட்டமாகும்.
முன்னாள் பிரதமர் நேரு வழங்கிய உறுதிமொழியையும், அதன்மூலம் வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பையும் பயன்படுத்தி தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்கள் மொழி உரிமைகளை பாதுகாக்க ஓரணியில் திரண்டு பாஜகவின் மொழித் திணிப்பை முறியடிப்பார்கள் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago