அரசியல்ரீதியாக காமராஜரை இன்றும் மதிக்கிறேன்: சென்னை கொளத்தூர் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசியல்ரீதியாக காமராஜரை இன்றும் நான் மதிக்கிறேன் என்று கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள திருவிக நகர் காமராஜர் சமுதாய நலக்கூடத்தில் 9 ஜோடிகளின் திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நடத்தி வைத்தார்.

அப்போது முதல்வர் பேசியதாவது: கொளத்தூர் தொகுதியில் முதல்முறையாக நான் தேர்வானபோது, நடத்திய ஆய்வில் இந்த மண்டபம் என் கண்ணில் பட்டது. பாழடைந்த மண்டபமாக இருந்தது. அப்போது அங்கிருந்த வணிகர் சங்கத்தைச் சேர்ந்த பலர் என்னிடம், இந்த மண்டபம் கடந்த 1966-ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டதாகவும், அவர்தான் திறந்து வைத்தார் என்றும், இதை திருமண மண்டபமாகக் கட்டித்தர வேண்டும் என்றும் கூறினர்.

நீதிமன்ற வழக்கு, கரோனா பாதிப்பு இவற்றையெல்லாம் தாண்டி, பணிகளை விரைந்து முடித்து கல்யாண மண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி, கார் நிறுத்தும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்தில், மணமகன், மணமகளுக்கு தனித் தனி அறைகள், உறவினர்கள் தங்குவதற்கு தனி அறைகள், மிகப் பெரிய சமையல் கூடம், 500-ல் இருந்து 700 பேர் வரை உட்கார்ந்து பார்க்கவும், 200 பேர் சாப்பிடவும் வசதியான இடம், மின் தூக்கி என பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த மண்டபம் கொளத்தூர் தொகுதிக்கு கிடைத்துள்ள பெருமை.

காமராஜர் பெயர்

அத்துடன் இங்கு உள்ளவர்களின் கோரிக்கையை ஏற்று,மண்டபத்துக்கு காமராஜர் பெயர்சூட்டப்பட்டுள்ளதுடன், அவர்1966-ல் திறந்துவைத்தபோதுஇருந்த கல்வெட்டையும் பாதுகாத்து அங்கேயே வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல்ரீதியாக இன்றும் நான் காமராஜரை மதிப்பது மட்டுமல்ல; என் திருமணத்துக்கு நேரடியாக வந்து என்னை வாழ்த்தியவர் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

அழைப்பிதழ் தந்த கருணாநிதி

சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில், காமராஜர் உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தார். அவரது வீட்டுக்கு நேரில் சென்று, திருமண அழைப்பிதழை எனது தந்தை கருணாநிதி கொடுத்திருக்கிறார்.

அப்போது, ‘‘என் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது, வருவதற்கு எனக்கு வாய்ப்பு இல்லை. இருந்தாலும், உங்கள் மகன் ஸ்டாலினைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகவும் சுறுசுறுப்பான இளைஞராக இருக்கிறார். அவரை நான் எப்படியாவது நேரடியாக வந்து வாழ்த்த வேண்டும் என்று எனக்கு ஆசைதான்’’என்றாராம்.

உடனே, ‘‘நீங்கள் வருவதற்கு வாய்ப்பு இருந்தால், நான் மண்டபத்தையே மாற்றி உங்கள் கார்மேடையில் வந்து நிற்க வசதியாக ஏற்பாடு செய்ய காத்திருக்கிறேன்’’ என்று கருணாநிதி சொல்ல, ‘‘அப்படியென்றால், நான் வருகிறேன்’’ என்று காமராஜர் தெரிவித்தாராம்.

என் திருமணம் இப்போது அறிவாலயம் உள்ள இடத்துக்கு அருகில் இருந்த ஆபட்ஸ்பரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு மேடைக்கு கார் வரமுடியாது என்பதால், அண்ணா சாலையில் உள்ள உம்மிடியார்ஸில் பந்தல் போட்டு, கார் மேடையில் வந்து நிற்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய கார் மேடைக்கு வந்து, அதில் இருந்து இறங்கி வந்து என்னை காமராஜர் வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அப்படிப்பட்ட, எல்லோராலும் போற்றக்கூடிய காமராஜர் பெயர்இந்த மண்டபத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த 9 ஜோடிகள் மட்டுமல்ல; இன்னும் எண்ணற்ற ஜோடிகளுக்கு இந்த மண்டபத்தில் திருமணம் நடைபெறக் காத்திருக்கிறது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE