கட்சியில் கமல்ஹாசனின் ஈடுபாடு குறைந்ததாக குற்றச்சாட்டு: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிர்வாகி விலகல்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு கட்சியில் ஈடுபாடு குறைந்ததாகக் கூறி, அக்கட்சியின் தலைமை நிலைய மாநில செயலர் பொறுப்பு வகித்த இ.சரத்பாபு அக்கட்சியில் இருந்து நேற்று விலகினார்.

தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் திமுக, அதிமுக ஆட்சிகளைப் பார்த்து சலிப்படைந்த மக்கள், நீண்ட நாட்களாக ஒரு மாற்று கட்சி வருகையை எதிர்பார்த்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதும், இக்கட்சி மீது மக்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. அதன் காரணமாக 2019 மக்களவைத் தேர்தலில் இக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். சில தொகுதிகளில் அமமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று, 3.7 சதவீத வாக்குகளுடன் 3-ம் இடத்தைப் பிடித்திருந்தது.

இதன் காரணமாக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இக்கட்சி முக்கிய பங்காற்றும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்வலுவான கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல், ஒதுக்கிய தொகுதிகளில் வேட்பாளர் கிடைக்காமல், திருப்பிக் கொடுக்கும் கட்சிகளிடம் கூட்டணி வைத்ததால் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போனது. அந்தத் தேர்தலில் கட்சியில் ஒருவரும் வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை விட 1,728 வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றார். இந்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் 2.5 ஆகக் குறைந்தது.

அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலர் கட்சியிலிருந்து வெளியேறத் தொடங்கினர். அவ்வாறு கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன், சுற்றுச்சூழல் அணி நிர்வாகி பத்மபிரியா, தலைமை நிலைய பொதுச்செயலராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு போன்றோர் வெளியேறினர். இதன் தொடர்ச்சியாக இப்போது கட்சியின் தலைமை நிலையச் செயலராக இருந்த இ.சரத்பாபு கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனநாயக ரீதியாக கட்டமைக்கப்பட்ட, ஓர் அரசியல் அமைப்பான மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டும், தலைவர் கமல்ஹாசன் மீதான நம்பிக்கையோடும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இணைந்து தீவிர கட்சி பணியில் ஈடுபட்டு வந்தேன். தலைவரின் கொள்கைகளை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு 21,139 வாக்குகள் பெற்று 3-ம் இடம் பிடித்தேன். அதன் பின்னர் எனக்கு மாநிலச் செயலர் பொறுப்பு வழங்கினார்.

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தேன். இந்த இரு உள்ளாட்சித் தேர்தல்களில் தலைவர் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்தது. அதன் பிறகு தலைவரின் ஈடுபாடு கட்சியில் வெகுவாகக் குறைந்து, வருவாய் ஈட்டும் மனநிலைக்கு முழுவதுமாக சென்றுவிட்டார். இதனால் தமிழ்நாட்டில் இக்கட்சியால் எவ்வித மாற்றத்தையும் மக்களுக்காக கொண்டுபோய் சேர்க்கமுடியாது என்ற நிலையில், இக்கட்சியில் தொடர மனமில்லாமல் விலகுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE