பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் நாசர் தகவல்

By ந.சரவணன்

வேலூர்: தமிழகத்தில் விவசாயிகள் நலன் கருதி பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஜமால்புரம் கிராமத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொகுப்பு பால் குளிரூட்டும் மையத்தின் திறப்பு விழா இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் ( அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஆவின் ஆணையர் பிரகாஷ் வரவேற்றார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பால் குளிரூட்டும் நிலையத்தை திறந்து வைத்து பேசியது: ‘‘தமிழகத்தில் பால் 1 லிட்டருக்கு ரூ.3 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசுக்கு தினசரி ரூ.85 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, ரூ.276 கோடி பால் வளத்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும், தமிழக மக்களின் நலன் கருதி அரசு இந்த முடிவை எடுத்தது. கடந்த 10 ஆண்டுகளில் பால் கொள்முதல் 34 லட்சம் லிட்டராக மட்டுமே இருந்தது. தற்போது உற்பத்தி திறன் அதிகரித்து, 43 லட்சத்து 14 ஆயிரம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதுவே அரசின் சாதனை. இதன் மூலம் தமிழகத்தில் வெண்மைப் புரட்சி ஏற்பட்டுள்ளது.

பால் உற்பத்திக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் பால் மூலமாக 156 பால் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மகளிர் குழுவினர் நலன் காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறியதாவது: "பால் கொள்முதல் விலையை அதிகரிக்க தமிழக முதல்வரிடம் அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி, பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை விரைவில் அறிவிப்பார்.

தமிழகத்தில் உற்பத்தியாகும் பால் வெளி மாநிலங்களுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பால் வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE