மேட்டூர் அணை திறப்பு; தண்ணீர் வீணாகாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்திடுக: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து இன்று திறந்து விடப்படும் தண்ணீர் வீணாகாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக காவேரி ஆற்றில் நீர் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் சூழ்நிலையில் உள்ளததையடுத்து, காவேரி டெல்டா பாசனத்திற்கான நீரை முன்கூட்டியே, அதாவது ஜூன் 12-ம் தேதிக்குப் பதிலாக மே 24-ஆம் தேதியன்று, அதாவது 20 நாட்கள் முன்பாக, முதல்வர் திறந்துவிட இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீரை முன்கூட்டியே திறந்து விடுவதன் மூலம், விவசாயிகள் அதிக பரப்பளவில் பயிரிடுவதற்கும், சம்பா சாகுபடிக்கு தயாராவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றாலும், திறந்துவிடும் தண்ணீர் அனைத்தும் வீணாகாமல் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப டெல்டா மாவட்டங்களில் காவேரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள், தடுப்பணை கட்டும் பணிகள், கரைகளை பலப்படுத்தும் பணிகள் ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகைப்படத்துடன் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கல்லணையில் இருந்து பிரியும் கல்லணைக் கால்வாய் ஆற்றின் தரைத்தளம் மற்றும் கரையின் பக்கவாட்டுகளில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மதகுகளை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் கல்லணை கால்வாய் கிளை ஆறுகளில் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வெண்ணாறு, காவேரி, குடமுருட்டி ஆறுகளில் தடுப்பணை கட்டும் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், அடப்பன் பள்ளம் கீழ்ப்பாலத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தத் தருணத்தில் கல்லணை கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் மேட்டூர் அணையில் இன்று திறந்துவிடும் தண்ணீர் இந்த மாதம் 26 அல்லது 27 ஆம் தேதியன்று கல்லணையை வந்தடையும் வாய்ப்பு உள்ளது என்றும், அங்கிருந்து அன்றே பாசனத்திற்காக நீரை திறந்துவிடும் பட்சத்தில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டு தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளது என்றும், ஒப்பந்ததாரர்கள் தூர்வாரும் பணிகளை அவசர கதியில் முடித்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டு அரசுக்கு பண விரயம் ஏற்படும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் நீரை முழுவதுமாக பயன்படுத்தும் வகையில், நீரை தேக்கி வைப்பதற்கான நீர் மேலாண்மை யுக்திகளை அரசு கடைபிடிக்க வேண்டுமென்று டெல்டா விவசாய சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

"மக்களுக்கு உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதும், தானே உணவாக அமைவதும் மழையே" என்ற வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதால் காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்கள் மற்றும் கிளைக் கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்பதையும், இதன் காரணமாக நீர் வீணாகக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் அனைத்தும் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழக முதல்வரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்