உங்கள் குரல் - தெருவிழா @ திருப்பத்தூர் | திருப்பத்தூரில் புதிய பணிகள் மேற்கொள்ள ரூ.39.75 கோடி நிதி கேட்டு அரசுக்கு கோரிக்கை

By ந.சரவணன்

திருப்பத்தூர் நகராட்சியில் புதிய பணிகள் மேற்கொள்ள ரூ.39.75 கோடி நிதி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருக்கக்கூடிய பொது பிரச்சினைகளை தங்களது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘உங்கள் குரல் - தெரு விழா’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் உங்கள் குரல் - தெருவிழா நிகழ்ச்சி திருப்பத்தூர்- தி.மலை சாலையில் உள்ள சி.கே.சி. திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் முதுநிலை விற்பனை பிரதிநிதி டி.சுரேஷ் வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் சித்தா மருத்துவ பிரிவு தலைமை மருத்துவர் விக்ரம்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, ‘‘மக்களிடம் வாசிப்பு திறன் படிப்படியாக குறைந்து வருகிறது. இது நீடிக்கக்கூடாது. மாணவர்களுக்கும் படிக்கும் ஆர்வத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். படிக்கும் பழக்கம் தொலைந்து வருகிறது. அதை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

சிறு வயது முதலே புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கரோனா காலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சித்த மருத்துவ பிரிவு எவ்வாறு செயல்பட்டது என்பதை பொதுமக்களுக்கு ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் விரிவாக தெரியப்படுத்தியது பெருமைக்குரியதாகும்’’ என்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் பேசும்போது, ‘‘உள்ளாட்சி பிரிதிநிதிகளாக பொறுப்பேற்றுள்ள தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் என அனைவரும் பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற் காகவே, ‘இந்து தமிழ் திசை' இப்படியொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வார்டு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க என்னென்ன செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை எப்படி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அத்தோடு இல்லாமல், ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்து தர வேண்டும். காரணம், சாலை, குடிநீர், மின்விளக்கு, கால்வாய் வசதி என என்ன செய்து கொடுத்தாலும், அது 5 முதல் 10 ஆண்டுகள் வரை தான் மக்கள் மனதில் நிற்கும். ஆனால், கல்வி எனும் அழியா செல் வத்தை நீங்கள் தந்தால் அது காலத்துக்கும் நிலைத்து நிற்கும். கல்வி தான் மனிதனை வளர்ச்சியடைய செய்கிறது.’’ என்றார்.

நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா முன்னிலை வகித்து பேசும்போது, ‘‘திருப்பத்தூர் நகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சாலை வசதி, குடிநீர், கால்வாய் உள்ளிட்ட வசதிகள் ஒவ்வொரு பகுதியாக செய்து வருகிறோம். பொதுமக்கள் நேரில்தான் வந்து புகார் தெரிவிக்க வேண்டும் என்பது இல்லை, தொலைபேசி வாயிலாக வும், நகராட்சி அலுவலகத்தில் புகார் பதி வேடுகள் மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்’’ என்றார்.

நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமை வகித்து பேசும்போது, ‘‘நாங்கள் பொறுப்புக்கு வந்து இரண்டரை மாதங்களே ஆனாலும், உங்கள் (பொதுமக்கள்) குறைகளை தீர்க்கவும், அதை செவி கொடுத்து கேட்கவும் இங்கு வந்துள்ளோம். திருப்பத் தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதுதவிர ஞாயிறு தோறும் ஒவ்வொரு வார்டு பகுதியாக ‘தூய்மை திருப்பத்தூர்' என்ற திட்டத்தின் கீழ் நகரை சுத்தம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை, தெரு மின் விளக்கு, குப்பைக்கழிவு அகற்றுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தடையின்றி நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை தீர்த்து வைக்க என்னென்ன செய்ய வேண்டும் அதை அனைத்தும் குறைவில்லாமல் செய்ய தயாராக இருக்கிறோம்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் 87 இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.81 கோடி மதிப்பில் 27 இடங்களில் மண் சாலைகள் தார்ச்சாலைகளாக மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. இது மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் வசதிக்காக ரூ.1.98 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.

மேலும், 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.13.64 கோடியும், 5 ஆண்டுகளில் சாலை புனரமைப்பு பணிக்காக ரூ.26 கோடியே 11 லட்சம் நிதி கேட்டு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். இந்த நிதி ஆதாரம் கிடைத்தவுடன் திருப்பத்தூர் நகராட்சியை மேம்படுத்தவும், மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி துணைத் தலைவர் சபியுல்லா, கவுன்சிலர்கள் பர்வீன் பேகம், சுதாகர், சரவணன், அபிராமி பரத், சுகுணா ரமேஷ், மனோகரன், சீனிவாசன், அசோகன், நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி, நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் விவேக், குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், அன்பாசிரியர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் குரல் தெருவிழா நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை' நாளிதழுடன் திருப் பத்தூர் சேகர் சிலக் சென்டர் இணைந்து நடத்தினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாசகர்களுக்கு, தேவி ஏஜென்சி சார்பில் குடிநீர், பிஸ்கெட், தேநீர் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் சேகர் ரெடிமேட் உரிமையாளர் வெங்கடேஷ் மதிய உணவுக்கான ஏற்பாடு களை செய்திருந்தார். நிகழ்ச்சியை ரேகா ரமேஷ் தொகுத்து வழங்கினார். திருப்பத்தூர் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண் பாடினர்.

மொகைதீன், திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆரீப்நகரில் சாலை வசதி, குடிநீர் வசதி இல்லை. பகுதி நேர ரேஷன் கடை வேண்டும். மழை காலங்களில் கால்வாய் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே , அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும்.

அம்பலூர் அசோகன், திருப்பத்தூர்

திருப்பத்தூரில் உள்ள 2 ஏரிகளை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். திருப்பத்தூரில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது வேதனைக் குரியது. ஆகவே, மரங்களை வெட்டாமல் அதை வேரோடு பெயர்ந்து வேறு இடத்தில் நட்டு, மரங்களுக்கு மறுவாழ்வு தர வேண்டும். அம்பலூர் - எக்ஸ்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டவுள்ளனர். அதன் கண்களுக்கு இடையே தடுப்பணை கட்ட நகராட்சி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். திருப்பத்தூரின் 2-வது குடிநீர் ஆதாரம் அம்பலூர் பாலாறு என்பதால் இதை நிறைவேற்ற வேண்டும்.

அசியா, திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி 25-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், மழைநீர் வீடுகளில் நுழைகிறது. சாலை வசதி இல்லை. தெரு மின் விளக்கு இல்லை. குடிநீர் வாரத்துக்கு 2 முறை மட்டுமே வழங்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

தனபால், திருப்பத்தூர்

திருப்பத்தூர் 11-வது வார்டு தியாகி சிதம்பரனார் தெருவில், கால்வாய் மீது ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால், கழிவுநீர் சீராக செல்ல முடியவில்லை. அதேபோல, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பத்தூரில் நகராட்சி சார்பில் தினசரி சங்கு முழங்கப்பட்டு வந்தது. தற்போது சங்கு முழக்கம் இல்லை. திருப்பத்தூரின் அடையாளமான சங்கு பழையபடி ஒலிக்க வேண்டும்.

பசலூர் ரகுமான், திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி 22-வது வார்டில் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதேபோல, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும். இருக்கின்ற கால்வய்களை தூர்வார வேண்டும். கால்நடைகளால் குப்பைக்கழிவுகள் சாலை முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. குப்பையை தினசரி அள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்