சென்னை: "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இதுபோன்று சலுகைகளைப் பறித்து சாதனை படைப்பது தான் 'திராவிட மாடல்' போலும்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "நீரின்றி அமையாது உலகம்" என்ற திருவள்ளுவரின் வாக்கினை மனதில் நிலைநிறுத்தி, தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப் பகுதிகளில் குடிநீர் வழங்கும் பணிகளை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல்; நகரப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்துதல்; கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல்; குடிநீரின் தரத்தை பரிசோதித்தல் மற்றும் கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை திறம்பட மேற்கொண்டு வருபவர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாரியங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு ஒரே நேரத்தில் வழங்கப்படுவது இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்த முறை தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
திமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு முன்பு "பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்", "அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவோருக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்", "80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் உயர்த்தி வழங்கப்படும்" என்றெல்லாம் வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று ஆட்சியில் அமர்ந்தவுடன் அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டதோடு மட்டுமல்லாமல், "அகவிலைப்படி உயர்வை தாமதமாக வழங்குவது", "ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணம் பெற்றுக் கொள்வதை நிறுத்துவது", "கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்துவது" என்ற வரிசையில் தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
இதுபோன்று சலுகைகளை பறித்து சாதனைப் படைப்பது தான் 'திராவிட மாடல்' போலும். எந்த மாடலாக இருந்தாலும் சரி, பெற்று வந்த சலுகைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. திமுக அரசின் இந்த தொழிலாளர் விரோதப் போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் எத்தனை வாரியங்களில் இதுபோன்ற நடைமுறை கடைபிடிக்கப்படுகிறதோ! ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவக்கப்பட்டு 51 ஆண்டுகள் கடந்த நிலையில், முதன் முறையாக பணியிலிருப்பவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, அதன் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி வைத்த அரசு திமுக அரசு பணியில் இருப்போரையும், ஓய்வூதியதாரர்களையும் பிரித்துப் பார்த்து அகவிலைப்படி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், பணியில் இருப்போருக்கு வழங்கப்படும்போது ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுவதுதான் நடைமுறை என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப் பணியாளர்களும், ஓய்வு பெற்றவர்களும் தெரிவிக்கிறார்கள்.
மேலும், ஓய்வு பெற்ற பெரும்பாலான ஊழியர்கள் வறுமை நிலையில் இருப்பதாகவும், மருத்துவம் மற்றும் வீட்டு வாடகைக்கு மட்டுமே பெரும் தொகை செலவிடப்படுவதாகவும், விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில் 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை இந்த ஆண்டு ஜனவரி மாதம் மூதல் ரொக்கமாக அளித்தால் பேருதவியாக இருக்கும் என்றும், வயதான காலத்தில் வேறு பணிகளுக்கு செல்ல முடியாத நிலையில் பெரும்பாலானோர் இருப்பதாகவும், பணியில் இருப்போருக்கு வழங்கப்படும்போது ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை இனி வருங்காலங்களில் கடைபிடிக்க வேண்டுமென்றும் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனவே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை பணியில் இருப்போருக்கு வழங்கப்பட்டதுபோல 01-01-2022 முதல் உயர்த்தி வழங்கவும்; பிற வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இதுபோன்று வழங்ப்படாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவும்; இதுபோன்ற தவறான முன்னுதாரணத்தை இனி வருங்காலங்களில் ஏற்படுத்த வேண்டாம் என்றும் தமிழக முதல்வரை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago